ஆவணி அமாவாசையில் தானம் செய்ய வேண்டிய பொருள் இதுதான்.. தவறியும் செய்யக்கூடாத செயல்கள் என்ன தெரியுமா
சென்னை: இன்று ஆவணி அமாவாசை நாளாகும்.. இன்று வெள்ளிக்கிழமை காலை 11:55 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 23ம் தேதி நாளை காலை 11:35 மணிக்கு முடிவடைகிறது.. அமாவாசை திதி இரவில் இருப்பது அல்லது தங்குவது அடிப்படையில், ஆவணி அமாவாசை, வெள்ளிக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இன்றைய தினம் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? தான தர்மம் செய்யக்கூடிய பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
இன்று ஆவணி அமாவாசை என்பதால், அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிடவேண்டும்.. சூரிய பகவானுக்கு நீரை சமர்ப்பித்து, பிரார்த்திக் கொள்ளவேண்டும்..

பிறகு நீர்நிலைகளில் முன்னோர்களின் அமைதிக்காக பித்ரு பூஜை மற்றும் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.. அந்தணர்களை வைத்து தர்ப்பணம் தரமுடியாமல் போனாலும், வீட்டிலேயே எள்ளும், நீரும் இரைத்து வழிபடலாம்.
இந்த நாளில் பெண்கள் துர்கா தேவியை மனம் உருகி விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்களுடைய குடும்பம் நல்ல ஆரோக்கியத்தோடும் செல்வ செழிப்போடும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.
நெய், ஆடைகள், கோதுமை
அதேபோல, இந்நாளில் தான தர்மங்கள் செய்வது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கும்.. திருமணமாகாமல் தாமதமாகுவோருக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.. நிதி நெருக்கடிகள் குறையும்.. காரிய தடைகள் அகலும்.
இன்றைய தினம் கால்நடைகளுக்கு உணவு அளிப்பது, கால்நடைகளை பராமரிப்பவர்களுக்கு உதவி செய்வது போன்றவை செய்வதும் புண்ணியம் தரும். அதேபோல அரிசி, கோதுமை போன்ற தானியங்களை தானம் அளிக்கலாம்.. இதனால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், பித்ருதோஷத்திலிருந்தும் விடுபடலாம்.
அதேபோல இன்றைய அமாவாசை நாளில், நெய்யை தானமாக தரலாம்.. கோவிலில் விளக்கேற்றுவதற்கு நெய்யை தானமாக தரலாம்.. எண்ணெய் தானமும் செய்யலாம்.. இதனால் செல்வம் தழைத்தோங்கும்.. அதேபோல, கோவில்களுக்கு தானியங்கள், வெல்லம், பருப்பு வகைகளை தானமாகவோ அல்லது சமைத்தோ தரலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மாவும் சாந்தி அடையும்.
அதேபோல, ஆடைகளையும் தானம் செய்யலாம்.. பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளை தானமாக தரலாம்.. பயன்படுத்திய ஆடைகளை விட பயன்படுத்தாத ஆடைகளை தானமாக அளிக்கலாம்.. அந்தணர்களுக்கு வெள்ளை நிற தைக்காத துணிகளை தானமாக தரலாம். ஆடைகளை தானமாக வழங்கும்போது, முன்னோர்களின் ஆசியை பெற முடியும்.
இன்றைய நாளில் செய்யக்கூடாதவை
இன்று ஆவணி அமாவாசை என்பதால் மங்களகரமான விஷயங்களை செய்யக்கூடாது.. புதிய முயற்சிகளை துவங்க கூடாது, முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது, தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள், பூஜை பொருட்களை வாங்கக்கூடாது..
இன்று அசைவ உணவுகளை மட்டுமல்ல, சுரைக்காய், கீரை, கொண்டக்கடலை, பார்லி, வெள்ளரிக்காய், முள்ளங்கி, பாகற்காய் போன்ற உணவுகளை சாப்பிடுவதையும், சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். அதேபோல, துணி துவைப்பது, நகம் வெட்டுவது, முடி வெட்டுவது, போன்றவற்றையும் செய்யக்கூடாது.
வீட்டை பெருக்கும் துடைப்பம், கோதுமை போன்றவற்றையும் இன்றைய நாளில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அப்படி வாங்கினால் முன்னோர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடுமாம்,. அதேபோல, தலைக்கு எண்ணெய் தேய்க்கவும் கூடாது, தலைக்கு குளிக்கவும் கூடாது.. மாறாக எண்ணெய் தானம் செய்யும்போது, பித்ரு தோஷமும், சனி தோஷமும் விலகும்.
இன்று ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.. பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும் செய்யப்பட்டன.. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.. மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications