ஆவணி மூலம் திருவிழா.. பாண்டிய மன்னனாக முடிசூடும் சுந்தரேஸ்வரர்.. மதுரையில் கோலாகலம்
மதுரை: பாண்டிய மன்னனாக மதுரையில் நாளை முடிசூடிக்கொள்கிறார் சுந்தரேஸ்வரர். ஆவணி மூலம் திருவிழா நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளைய தினம் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை முதல் மதுரையில் சுந்தரேஸ்வரர் ஆட்சி தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி வரை திருவிழாக்கள் களைகட்டும். சித்திரை திருவிழா, வைகாசி வசந்தோற்சவம், ஆடி முளைக்கொட்டு விழா என களைகட்டியது. ஆவணி மாதம் மூலம் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவபொருமான் நிகழ்த்தும் திருவிளையாடல்களை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடத்தும் வகையிலும் மூலம் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை திருவிழா போலவே ஆவணி மூலம் திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

சிவபெருமான் தனது பக்தர்களின் பக்தியை மக்களுக்கு உணர்த்துவதற்காக 64 திருவிளையாடல்களை நடத்தியதாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இந்த லீலைகளில் 12 லீலைகள் மதுரையில் நடத்தியதாக சொல்கிறது திருவிளையாடல் புராணம். கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு மோட்சம் அளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அருளுதல், உலவாக்கோட்டை அருளியது. பாணனுக்கு அங்கம் வெட்டியது போன்ற லீலைகளுடன் முக்கிய லீலைகளாக வளையல் விற்ற லீலை நடைபெறும் நாளன்று இரவில் பாண்டிய மன்னனாக முடிசூடிக்கொள்கிறார் சுந்தரேஸ்வரர்.
நாளைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை 7 ஆம் நாளன்று வளையல் விற்ற லீலையும் அன்று இரவு தங்கப்பல்லாக்கில் இறைவன் வீதி உலா வருகிறார். இரவு 7 மணிக்கு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. நாளைய தினம் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி முடிந்து சுந்தரேஸ்வரர் ஆட்சி தொடங்குகிறது. வரும் சித்திரை மாதம் வரை பாண்டிய மன்னனாக அரசாட்சி செய்வார் சுந்தரேஸ்வரர்.
வரும் 26ஆம் தேதியன்று காலையில் திருப்பரங்குன்றம் முருகன் வள்ளி தெய்வானையுடன் மதுரைக்கு புறப்படுகிறார். 8ஆம்நாளன்று சனிக்கிழமை நரியை பரியாக்கிய லீலை நடைபெறும் அன்றைய தினம் திருவாதவூர் மாணிக்கவாசகர், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி எழுந்தருளுவார்கள். சொக்கநாதர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
9ஆம் நாளன்று புட்டுத்திருவிழா நடைபெறும். புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற லீலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி புட்டுத்தோப்புக்கு சென்று அங்கு புட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மட்டும் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று, ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்வையிட்டு தரிசிக்கலாம். இரவு 9.30 மணியளவில் மீண்டும் கோயிலுக்கு எழுந்தருள்வர்.
28ஆம் தேதி விறகு விற்ற லீலை நடைபெறுகிறது. சுவாமியும் அம்மனும் தங்கச்சப்பரத்தில் காட்சி அளிக்கின்றனர். 29 ஆம் தேதியன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கச்சப்பரத்தில் காட்சி அளிக்கின்றனர். 30ஆம் தேதியன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவாதவூர் மாணிக்கவாசகரும், திருப்பரங்குன்றம் சுப்ரமணியரும் விடை பெற்று சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications