Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகை கடலில் மிதந்து வந்த தங்க வெள்ளி மீன்கள்.. சிவன் திருவிளையாடல்.. அதிபத்த நாயனார் குரு பூஜை

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தனது பக்தர்களின் பெருமைகளை உலக மக்களுக்கு உணர்த்த சிவன் ஆடிய திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

இன்றைய காலத்தில் பட்டினியாக இருக்கும் போது 100 ரூபாய் கீழே கிடைத்தாலே அதை கொண்டுபோய் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்றுதான் இன்றைக்கு பலரும் நினைப்பார்கள். வறுமையில் வாடிய போதும் ரத்தின கற்கள் பதித்த தங்க மீன் வலையில் கிடைத்தும் அதை இறைவனுக்கு அர்ப்பணித்த சிவ தொண்டர்களும் இந்த தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கின்றனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் என்ற
சிவ தொண்டருக்கு இறைவன் முக்தியளித்த விழா ஆண்டு தோறும் நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

Adhipaththanayanar dedicated the gold fish to the Lord Siva in Nagapattinam

ஆவணி மாதத்தில் சிவபெருமான் ஏராளமான திருவிளையாடலை நிகழ்த்தியுள்ளார். மதுரையில் அவரது திருவிளையாடலை மக்களுக்கு உணர்த்தவே ஆவணி மூலம் திருவிழா, புட்டுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. நாகப்பட்டினத்திலும் தன் தொண்டரிடம் சிவன் ஆடிய திருவிளையாடல்தான் தங்கம் வெள்ளி மீன்களை கடலில் வர வைத்த புராண கதையை பார்க்கலாம்.

நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், கடல் நாகைக் காரோணம் என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் காயாரோகணேஸ்வரர். அன்னையின் திருநாமம் நீலாயதாட்சி என்னும் கருந்தடங்கண்ணி. காயம் என்றால் உடம்பு என்று பொருள்படும். ஆரோகணம் என்பதற்கு உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல் என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு காயாரோகணர் என்றும், இத்தலத்திற்கு காயாரோகணம் என்றும் பெயர் வந்தது.

மனித உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்தார் புண்டரீக மகரிஷி. அவரது தவத்தை மெச்சி, அவரது உடலை தன்னுள் ஆரோகணம் செய்து முக்தி கொடுத்தார் ஈசன். இங்கு மூலவர் காயாரோகணேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நெற்றிப் பட்டத்துடன் கூடிய பெரிய சிவலிங்கமாக கிழக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர், அகத்தியர், வசிஷ்டர், கவுதமர், காசிபர், புலத்தியர், ஆங்கிரசர் முதலிய சப்த ரிஷிகளுக்கும், சிவபெருமான் மூல சிவலிங்கத்தில் இருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்த பெரும் புண்ணிய தலம் இதுவாகும். இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக இவ்வாலயம் திகழ்கிறது. மூலவருக்கு அருகில் தியாகராஜர் சுந்தர விடங்கராய் உள்ள சன்னிதியும் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் உள்ளன. அஷ்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் மகா சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. நாக தோஷங்கள் அகல, இத்தல ஈசன் வழிபாடு நமக்குத் துணை நிற்கும். சம்பந்தர், அப்பர், சுந்தரரின் பாடல் பெற்ற தலம் இதுவாகும். சுந்தரருக்கு இத்தல ஈசன் நவமணிகள், முத்துமாலை, பட்டு முதலியன வழங்கியுள்ளார்.

இத்தலத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு தனது திருமணக் காட்சியை இங்கும் காட்டி அருளியுள்ளார். இத்தல அம்பாள் நீலாயதாட்சியின் கண்கள் கருநீலத்தில் அழகானது. நான்கு திருக்கரங்களுடன் நின்றத் திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறார். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் அலங்கரிக்கப்பட்டவள் இந்த அன்னை. இங்குள்ள நீலாயதாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போலவே கன்னியாக காட்சித் தருகிறாள்.

சோழ நாட்டின் துறைமுக நகராக நாகபட்டினம் விளங்கிய காலம். நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபக்தர் இருந்தார். அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைத்தால் கூட அதனை சிவனுக்கு அர்ப்பணம் செய்வார் அந்த சிவ தொண்டர்.

ஒரு சமயம் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் என்றவாறே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபக்தர் பசியொடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி பசியால் வாடினர். உணவின்றி வாடினாலும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார்.

அதிபக்தரை சோதிக்க நினைத்த சிவபெருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக தங்க மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் அற்புதப் படைப்பாக இருந்தது. அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபக்தரின் கூறினார்கள். அன்றைய நாளில் அம்மீன் ஒன்றே கிடைத்தமையால், அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு முக்தியளித்தார்.

இந்த நிகழ்ச்சி நடந்தது ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாள் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது. நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு கடற்கரைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் நடப்பதால் ஊர்வலம்நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை நம்பியார் நகர் புதியஒளி மாரியம்மன் கோவில் மற்றும் அதிபத்த நாயனார் வணங்கிய அமுதீசர் கோவில்களில் இருந்தும், ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்களும் சீர்வரிசைகளை ஊர்வலமாக புதிய கடற்கரை நோக்கி எடுத்து வந்தனர். பின்னர் புதிய கடற்கரையில் சீர்வரிசை தட்டுகளை வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், செயல் அலுவலர்கள் தனலட்சுமி, பூமிநாதன், முருகன், சண்முகராஜன், ஆய்வாளர்கள் ராமதாஸ், சதீஸ்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நாகை புதிய கடற்கரை நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்தனர். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்தனர். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். இதனையடுத்து சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூஜை செய்தனர். இதனையடுத்து சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+