கடலில் முருகன் ஆடிய திருவிளையாடல்..பொக்கிஷத்தை கண்டு வியந்த பக்தர்கள்! அடுத்த நாளே காத்திருந்த ஷாக்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட உலகப் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் அருகே கடலில் காலப் போக்கில் மறைந்து போன தீர்த்த கிணறுகள் குறித்த 2 பழங்கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பக்தர்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும் அதனை பார்வையிட்டு வந்தனர். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2 கல்வெட்டுகள் இரண்டாக உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இதைத்தவிர பௌர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். திருச்செந்தூர் கடல் பகுதியில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் உள்வாங்குவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக புயல் மற்றும் கனமழை காரணமாக மாலையில் திடீரென திருச்செந்தூர் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக திருச்செந்தூர் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அப்போது கடல் உள்வாங்கிய பகுதியில் நீராடியபோது ஒரு 6 அடி உயரம் கொண்ட பெரிய கல்வெட்டு தென்பட்டுள்ளது.

அதை நீராடிய பக்தர்கள் சேர்ந்து கடல் உள்வாங்கி காணப்படும் பாசி படிந்த பாறையின் மேல் வைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் பேராசிரியர் சுதாகர் மற்றும் பேராசிரியர் மதிவாணன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடல் பாறை மேல் கிடந்த கல்வெட்டை எடுக்க தொடங்கினர்.
அதற்காக மைதா மாவை அந்த கல்வெட்டில் தடவி கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை தெளிவு படுத்தி படித்தனர். அதை அங்கு நின்ற பொதுமக்களும் பக்தர்களும் பார்த்தனர். அந்த கல்வெட்டில் மாதா தீர்த்தம் எனத் தொடங்கியது. சொர்க்கம் முதலிய லோகங்களுக்கு போகும் பொருட்டு இதில் தர்ப்பணம் செய்கின்றவர்களுக்கு 4 வகையான பலன்களை கொடுக்கும். என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கல்வெட்டில் மொத்தம் 15 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதை தொடர்ந்து பேராசிரியர்கள் கடற்கரை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்து அடுத்த 100 அடி தூரத்தில் மற்றொரு 6 அடி உயரம் கொண்ட கருங்கல் தூண் கிடந்தது. அதன் மேல் பகுதியில் எழுத்துக்கள் எதுவும் இல்லை. பொதுமக்கள் உதவியுடன் அது புரட்டிப் போட்டப்பட்ட போது மறுபுறம் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த கல்வெட்டில் 17 வரிகள் பொறிக்கப்பட்டு இருந்தது. பிதா தீர்த்தம் எனத் தொடங்கியது. இதிலும் சொர்க்கம் முதலிய லோகங்களுக்கு போகும் பொருட்டு இதில் தர்ப்பணம் செய்கின்றவர்களுக்கு 9 வகையான பலன்களை கொடுக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கல்வெட்டுகள் சுமார் 50 முதல் 100 ஆண்டுகளுக்கு உள்பட்டது எனவும், இவை நாழிக்கிணறு அருகே இருக்கும் பிற நல்ல தண்ணீர் கிடைக்கும் தீர்த்த கிணறுகள் இருந்ததை குறிக்க நடப்பட்டவையாக இருக்கும் எனவும், இம்மாதிரியான நல்ல தண்ணீர் கிணறு இந்தப் பகுதியில் நிறைய உள்ளன எனவும், அவற்றைச் சீரமைத்தால் கடலில் நீராடிய பொதுமக்கள் நல்ல தண்ணீரில் குளிக்க எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே திருச்செந்தூர் வள்ளி குகை பகுதியில் இருந்து கடற்கரை பகுதியில் உள்ள சந்தோஷ மண்டபம் வரை 24 தீர்த்த கிணறுகள் இருந்துள்ளது. குறிப்பாக லக்ஷ்மி தீர்த்தம், துர்கா தீர்த்தம், நாழிக்கிணறு தீர்த்தம், செல்வ தீர்த்தம், மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம் என பல்வேறு தீர்த்தங்கள் இருந்துள்ளது. அவை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு விட்டது. தற்போது நாழிக்கிணறு தீர்த்தம் மற்றும் செல்வ தீர்த்தம் மட்டும் தான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நாழி கிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடுகிறார்கள். செல்வ தீர்த்தத்தில் முருகனுக்கு அபிஷேக நீர் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 கல்வெட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. மேலும் இதை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில் இன்று கடற்கரையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கல்வெட்டுகளை பத்திரப்படுத்தி பாதுகாப்பதற்காக திருச்செந்தூர் கோவில் கடற்கரை பணியாளர்கள் அந்த கல்வெட்டு இருந்த கல்லை தேடிச் சென்றனர். அதை பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மாதா தீர்த்தம் என்று தொடங்கிய கல்வெட்டு இரண்டாக உடைந்து கிடந்தது. கோவில் முன்புள்ள கடலில் நீராடி பொழுதை போக்கிக் கொண்டிருந்தவர்கள் அந்த கல்லை பாறை மேல் இருந்து மறுபுறம் புரட்ட முயற்சித்துள்ளனர். அப்போது அந்த கல்வெட்டு இரண்டாக உடைந்துள்ளது. இதை பார்த்ததும் எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து அங்கு வந்த பணியாளர்கள் உடைந்த கல்வெட்டை பத்திரமாக அருகே மூவர் சமாது உள்ள இடத்தில் கொண்டு வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
மேலும் மற்றொரு கல்வெட்டு கடற்கரையோரம் உள்ளது. அதை ஜேசிபி இயந்திரம் மூலம் பாதுகாப்பாக எடுப்பதற்கான யோசனையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் கோவிலை சுற்றியுள்ள தீர்த்த கட்டங்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்த முக்கியமான கல்வெட்டு இரண்டாக உடைந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications