அர்ச்சனை தட்டு மாறி கோயிலில் வந்தால் என்னாகும்? தேங்காய் உடைக்கும் பலன்கள்.. இது அபசகுணமா? நன்மையா?
சென்னை: தேங்காய் உடைத்து முக்கிய காரியங்களுக்காக நாம் வழிபாடு செய்யும்போது, அந்த வேண்டுதல் நல்லபடியாக நிறைவேற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும். தேங்காய் எப்படி உடைந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். அதுமட்டுமல்ல, தேங்காய் உடைப்பதற்கு சகுனம் அவசியமா? தேவையில்லையா? என்பதை பற்றியும் சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
தேங்காய் வழிபடுவதன் நோக்கம் என்ன தெரியுமா? தேங்காயுக்கு மேலுள்ள மட்டையை மாய மலம் என்பார்கள்.. மட்டை என்ற மாய மலத்தை விலக்கினால், நார் என்பதை கண்ம மலம் தெரியும்..

கண்ம மலத்துக்கு அடுத்துள்ள ஓட்டை ஆணவ மலம் என்பார்கள்.. இந்த மூன்று மலங்களையும் நீக்கிய பிறகு கிடைக்கும் வெண்மையான பருப்பே பேரின்பம் ஆகும்.. அதாவது, இந்த 3 மலங்களையும் அகற்றி, பேரின்பத்தை அடையவேண்டும் என்பதற்காகவே தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுகிறோம்.
சகுனம் பார்க்க உடைபடும் தேங்காய்
சகுனம் பார்ப்பதற்காக உடைக்கப்படும் தேங்காய், அது உடையும் முறையைப் பொறுத்து நமக்குப் பலன்களைத் தரும். குறிப்பாக, தேங்காய் உடையும்போது சிறு, சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு மற்றும் ஆபரணம் பெருகும். தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால், நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும்..
5-ல்ஒரு பங்காக உடைந்தால் நீங்காத செல்வம் உண்டாகும்... சரிசமமாக தேங்காய் உடைந்தால் பட்ட துன்பமெல்லாம், தேங்காய் உடைந்ததுபோல் பட்டென தீர்ந்துவிடும்.. குடும்பத்தில் ஒற்றுமையும், மனக்கசப்புகளும் நீங்கும். நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றியாகும் என்பது ஐதீகம்.
மகிழ்ச்சி - செல்வம் - ஆரோக்கியம்
தேங்காய் உடைக்கும்போது தேங்காயின் சிறிய பாகம் தேங்காய்க்குள் விழுந்துவிடும்.. இப்படி விழுந்தால், அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது என்று அர்த்தம். சகுனம் பார்ப்பதற்காக தேங்காய் உடைக்கும்போது, அதில் பூ விழுந்தால், உங்கள் ஆசை மற்றும் கனவுகள் நிறைவேறும் என்று அர்த்தம்.
தேங்காய் உடைக்கும்போது கண் உள்ள பகுதி சிறியதாகவும், அடிப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் நீண்ட கால குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகிறது, அனைவரும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும் என்று அர்த்தம்.. 3-ல் ஒரு பங்காக தேங்காய் உடைந்தால் ரத்தினம் சேரும் என்பது நம்பிக்கையாகும்..
துன்பங்கள் - கஷ்டங்கள் - நோய்கள்
ஓடு மட்டும் தனியாக கழன்று வந்தால், துன்பம் வருமாம்.. அதேபோல தேங்காய் உடைக்கும்போது, கையிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஏற்படும்.. இதுவே நீளவாக்கில் உடைந்துவிட்டால், கையிலுள்ள நிதி காலியாகி, இன்னல்கள் சூழும்.
தேங்காயின் முடிப்பாகம் 2 கூறுகளாகிவிட்டால், தீயினால் பொருள் சேதம் ஏற்படலாம்.. முடிப்பாகம் 2 கூறாக உடைந்து, 2 கூறுகளோடு அவற்றின் ஓடு தெறித்து வீழ்ந்தால், நோய்கள் பீடிக்கலாம்.
கோயிலுக்குள் தேங்காய்
தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும்போது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம் வெற்றியை தரும்.. அதேபோல, அர்ச்சனைக்குக் கொடுத்த தட்டு மாறி வந்தால், அதை நாம் அபசகுனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதேபோல் தேங்காய் அழுகி இருந்தாலும் மனச்சஞ்சலம் கொள்ள தேவையில்லை. நினைத்த காரியம் சற்று தள்ளிப்போகலாம். கோயிலில் உடைக்கும் தேங்காய்க்கும் சகுனம் பார்க்கத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications