Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா..கொட்டும் மழையில் 7 ஊர் பல்லக்கு உலா.. வான வேடிக்கை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: திருவையாறு அறம் வளர்த்த நாயகி ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான சப்தஸ்தானத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கொட்டும் மழைக்கு இடையே 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

திருவையாறு ஐயாறப்பர் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க சிவத் தலங்களுள் ஒன்று, சிறப்புமிக்க பெருமைகளையுடையது.

Chithirai Tiruvizha 7 oor pallaku festival Tiruvaiyaru Aiyarappar temple

திருவையாற்றுக்கு பஞ்சநதம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன் முக்திபுரம் எனப் பல பெயர்கள் உண்டு என்று கூறுகிறார்கள். 'ஐ' என்றால் மேலான, உயர்வான என்றும் 'ஆறு' என்பதற்கு வழிகள், மார்க்கங்கள் என்றும் பொருள் உண்டு. இவற்றை மூலாதாரம், ஸ்வாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

இத்தலத்தைப் பஞ்சநதம் என்று அழைப்பதோடு, இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு பஞ்சநதீஸ்வரர் அல்லது ஐயாறப்பர் எனப் பெயர் விளங்குவதாலும் இங்கு பாயும் ஐந்து நதிகளையொட்டியே இந்தப் பெயர் வந்ததாக ஒரு கருத்து இருக்கிறது. ஆகவே இவ்வாறுகள் முறையே வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி, கொள்ளிடம் இவற்றையொட்டியே இந்தப் பெயர் வந்ததாகக் கருதலாம்.

இத்தலத்தின் பெயரே இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனுக்கும் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலத்தின் தலபுராணப்படி சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கை, பாலாறு, நந்திவாய்நுரை எனப்படும் நந்திதீர்த்தம் ஆகிய தெய்வீக தீர்த்தங்கள் இங்கு கலப்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் செய்திகள் உண்டு. இப்படிப் பலப்பல பெயர்க்காரணங்கள் கூறப்பட்டாலும், திருவையாறு எனும் பெயர் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவிட்டது.

திருவையாற்றின் சிறப்புக்கு மகுடமாக விளங்குவது இங்கு நடைபெறும் "சப்தஸ்தானம்" என்று வழங்கும் ஏழூர் திருவிழாவாகும். திருவையாற்றைச் சுற்றிலும் அமைந்துள்ள ஏழு ஊர்கள், அதாவது திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய இவ்வேழூருக்கும் உலா வரும் சப்தஸ்தானத் திருவிழா சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

திருநந்தியெம்பெருமான் திருமழபாடியில் நடைபெற்ற திருமணத்தையடுத்து சுயம்பிரகாசையம்மையோடு வெட்டிவேர் சிவிகையில் திருவையாறு வந்து, இங்கிருந்து ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியோடு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப் பல்லக்கிலும் இந்த ஏழு ஊர்களுக்கும் சென்று, அந்தந்த தலமூர்த்திகளோடு சேர்ந்து ஏழு ஊர்களுக்கும் வலம் வரும் காட்சியே சப்தஸ்தான விழாவாகும்.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. 29ஆம்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெற்றது. அப்போது 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. 3ஆம் தேதி தேரில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 6ஆம் தேதி சப்தஸ்தான பெருவிழாவையொட்டி ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் சிவாச்சாரியர்கள் வேத பாராயணம் முழங்க புறப்பட்டு சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமித்தது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது. தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

7 ஊர் பல்லக்குகளையும் வரவேற்பது போல பலத்த மழை பெய்தது. கொட்டும் மழைக்கு இடையேயும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் 6 ஊர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றன. இதனையடுத்து காவிரி ஆற்றில் வாணவேடிக்கையும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+