வீடெங்கும் செல்வம்.. பொன் மழை பொழிய.. லட்சுமி குபேர பூஜை.. தீபாவளி நாளில் மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருக நாம் மகாலட்சுமியை வேண்டி பூஜை செய்ய வேண்டும். தீபாவளி நாளில் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி செய்யும் பூஜைக்கு தனி மகத்துவம் உள்ளது. எந்த நேரத்தில் லட்சுமி குபேர பூஜை செய்யலாம் என்று பார்க்கலாம்.
குபேரன்: மகிழ்ச்சியோடு சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார். மகிழ்ச்சியோடு இருக்கும் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன.

குபேரன் அருள்: சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது. எனவேதான் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.
செல்வத்திற்கு அதிபதி: குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கி அவரிடம் இருந்து யந்திரத்தை பெற்று அந்த யந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்ததால் நல்லது நடந்தது. சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார்.
மகாலட்சுமி: மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை கொண்டவர். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.
குபேரன் ஆட்சி: குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். செல்வம் தரும் குபேரன் இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.
தீபாவளி நாளில் குபேர பூஜை: குபேரனை நாம் வணங்கினால் வற்றாத செல்வம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. செல்வ வளம் தரும் ஸ்ரீலட்சுமி குபேரரை வெள்ளிக்கிழமை, வியாழக்கிழமை பூசம் நக்ஷத்திரம் நாளில் பூஜை செய்து வணங்கினால் வற்றாத செல்வ வளம் பெறலாம். தீபாவளி நாளில் நாம் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளினால் நமக்கு செல்வ வளம் பெருகும்.
லட்சுமி பூஜை செய்ய நல்ல நேரம்: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை தென்னிந்தியாவில் ஒரு நாள் பண்டிகையாகவும், வடஇந்தியாவில் 5 நாள் பண்டிகையாகவும் கொண்டாடப்படும். தனத்திரயோதசி தொடங்கி இந்த ஆண்டு நவம்பர் 10 ம் தேதி துவங்கி, நவம்பர் 15 வரை தீபாவளியை மக்கள் கொண்டாட உள்ளனர்.
அமாவாசை திதி: தமிழ்நாட்டில் வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் பகல் 03.10 மணிக்கே அமாவாசை திதி துவங்கி விடுகிறது. அமாவாசை விரதம் இருப்பவர்கள் நவம்பர் 13 ம் தேதி காலையிலேயே துவங்க வேண்டும். நவம்பர் 12 ம் தேதி காலை 05.40 மணி முதல் இரவு 07.36 வரை லட்சுமி பூஜை செய்வதற்கு ஏற்ற சிறந்த நேரமாக சொல்லப்படுகிறது.
தவிர்க்க வேண்டிய நேரம்: தீபாவளி நாளான ஞாயிற்றுகிழமை மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான நேரம் ராகு காலமும், பகல் 12 முதல் 01.30 வரை எமகண்டம் நேரமும் உள்ளது. அந்த நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் லட்சுமி பூஜை செய்வத சிறப்பானதாகும். இந்த நேரத்தில் லட்சுமி தேவியையும், விநாயகர் மற்றும் குபேரரை வழிபடுவதால் வற்றாத செல்வம் வீட்டில் நிறைந்திருக்கும். மகாலட்சுமியின் அருளினால் செல்வம் மழையாக பொழியும்.












Click it and Unblock the Notifications