பல்லியை காண தவமிருக்கும் பக்தர்கள்.. தஞ்சை பெரியகோவிலில் குவியும் கூட்டம்... நினைத்தது நிறைவேறும்
தஞ்சாவூர்: பல்லி மேலே விழுந்தாலே தோஷம் என்று பலரும் அஞ்சும் நிலையில் பல்லியை பார்ப்பதற்காக அதன் தரிசனம் கிடைப்பதற்காக பல மணிநேரம் காத்திருக்கின்றனர் பக்தர்கள். தஞ்சாவூர் உள்ள பெரியகோவிலில் உள்ள வேப்பமரத்தில் உள்ள பல்லியை தரிசனம் செய்யத்தான் மக்கள் குவிந்து வருகின்றனர். ஏன் பல்லியை பார்க்கவேண்டும் எதற்காக இவர்கள் காத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
நம்முடைய வீட்டில் நாம் நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால் நல்ல சகுனம் என பெரியோர்கள் கூறுவார்கள். பல்லி நம் உடலின் மீது விழும் இடத்திற்கேற்ப தோஷங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. பல்லி நம்முடைய வீட்டில் இருப்பது மகாலட்சுமி அம்சம் நிறைந்தது என்று சொல்லப்படுகிறது.

பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
பல்லி மகாலட்சுமியின் அம்சம் என்று வட இந்தியர்கள் வணங்குகின்றனர். சிலரது வீடுகளில் பூஜை அறையில் வெள்ளியில் பல்லி செய்து வைத்து வணங்குவார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தங்க பல்லி இருப்பதை பலரும் பார்த்திருக்கலாம்.
இதே போல காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு பெருமாள் கோயிலில் தங்க பல்லி உள்ளது. இதனை தொட்டு தரிசனம் செய்து விட்டு வந்தால் நல்ல நிகழ்வுகள் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுவாகவே நம்முடைய வீட்டின் வரவேற்பு அறையில் பல்லி இருந்தால் அது மகிழ்ச்சியையும் மங்களத்தையும் தரக்கூடியது என்று சொல்கின்றனர். பண வருமானம் அதிகரிக்குமாம். பண வருமானம் தடையின்றி வரும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை சேர்த்து பார்ப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டம். அதாவது, உங்கள் பூஜை அறையில் மூன்று பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் மங்களகரமான ஒரு விஷயம். இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். சுப காரியம் கைகூடி வருமாம்.
கோயில்களில் உள்ள தல விருச்ச மரங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம். அதேபோல் வீட்டின் நிலைவாசலில் பல்லியைப் பார்ப்பதும் மிகவும் விசேஷமான ஒன்று. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கருவூரார் சன்னதியின் பின்புறம் ஒரு வேப்பமரம் உள்ளது.
கருவூரார் சன்னதியை சுற்றி வலம் வரும் பக்தர்கள் மரத்தில் பல்லி இருக்கிறதா? என மேல்நோக்கி பார்த்தபடி நின்று விடுகின்றனர்.
மரத்தில் பல்லியை பார்த்துவிட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் நாளுக்கு நாள் மரத்தில் உள்ள பல்லியை பார்க்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
ஒருவர் மரத்தில் பல்லியை தேடுவதை பார்த்து பக்தர்கள் கூட்டமாக குவிந்து விடுகின்றனர். உள்ளூர்வாசிகளைப் பார்த்து தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலா வரும் பயணிகளும் அவர்களுடன் இணைந்து பல்லியை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்
மரத்தில் கருவூரார் பல்லியாக காட்சி அளிப்பதாகவும் ஒரு சில பக்தர்கள் கூறுகின்றனர். மாமன்னன் ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை கூறும் குருவாக இருந்துள்ளார் கருவூரார் என அழைக்கப்படும் கருவூர் சித்தர். இவர் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சமாதிபூண்டும் தஞ்சைப் பெருவுடையார் கோவில் பிரகாரத்தில் தனிக்கோவில் கொண்டும் அருளாட்சி செய்து வருகிறார்.
இவரது அறிவுரைபடியே உலகம் போற்றும் இந்த கோவிலை கட்டியுள்ளார் ராஜ ராஜ சோழன். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டு வருபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும் அனைத்து வளங்களும் கிடைக்கும். எனவேதான் பல்லி வடிவத்தில் காட்சி தரும் கரூவூர் சித்தரை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மரப்பட்டையின் நிறத்திலேயே பல்லிகள் இருப்பதால் நீண்ட நேரமாக நின்று பல்லியை தேடுகின்றனர். ஒருசிலர் தேடிப்பார்த்தும் பல்லி தென்படாததால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். பல்லி தரிசனம் கிடைத்தவர்கள் பல மடங்கு மகிழ்ச்சியாக செல்கின்றனராம்.












Click it and Unblock the Notifications