மகாபாரத போர் டூ வைகுண்ட ஏகாதசி வரை! மார்கழி மாதத்தில் இத்தனை சிறப்புகளா?
சென்னை: மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மாதங்களில் நான் மார்கழி என மகாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி மாதத்தில்தான் தனுசு ராசியில் இருந்து சூரியன், குருவின் வீட்டில் குடியேறுகிறார். இப்படிப்பட்ட சிறப்புமிக்க மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம் என்பதையும் பார்க்கலாம்.
மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்றால் தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை தேவர்களுக்கு பகலாகவும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவாகவும் இருக்கும். அப்படியென்றால் மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம். எனவே மனிதர்களுக்கும் இது சிறப்பு வாய்ந்த மாதமாகவும் அமைகிறது.

மார்கழி மாதத்தில் ஆசைகளை குறைத்துக் கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். மார்கழி மாதங்களில் சுப நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும். ஆண்டாள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்துதான் பெருமாளை கணவனாக அடையும் பெருமையை பெற்றாள்.
மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளிப்பது என்பது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். சூரியனிடம் இருந்து வரும் ஓசோனின் தாக்கம் மார்கழியில் அதிகாலையில் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும் கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்தார்கள்.
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு திருவாதிரை திருவிழா நடக்கிறது. சிவனின் பக்தைகள் நோன்பு நோற்க தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் இடம்பெறுகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும் என்பதுதான் அவர்களின் வேண்டுதலாக இருக்கிறது. இந்த மார்கழியில் தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருப்புகழ், அபிராமி அந்தாதி, திருவருட்பா உள்ளிட்ட பாடல்கள் பாடப்படும்.
இதுகுறித்து av tamil story என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசலில் கோலமிடுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபடுவதும் நடைபெறும். அது போல் பசுஞ்சாணத்தில் பூசணி பூவை வைத்து அதை கோலத்தில் நடுவில் வைப்பது மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.
சில வீடுகளில் அந்தச சாணத்தில் பூ வைக்கப்பட்டதை எடுத்து வறட்டியாக தட்டி வைத்துக் கொண்டு பொங்கல் அன்று ஆற்றில் விடும் பழக்கமும் உள்ளது. மார்கழி மாதத்தில் பல புராதண நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில்தான் நடந்ததாக இதிகாசம் கூறுகிறது.
திருபாற்கடலை கடைந்த போது அதில் முதலில் ஆலகால விஷம் வந்ததும் சிவன் அதனை உண்டு, உலக மக்களை காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்! இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்ட போது கோவர்தனகிரி மலையை ஸ்ரீகிருஷ்ணர் குடையாக பிடித்து மக்களை காத்ததும் மார்கழியில்தான்!
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவதும் மார்கழியில்தான்! பெண்கள் அதிகாலையில் எழுந்து பாவை நோன்பு நோற்று திருப்பாவை பாடி, அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வர வேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது. இதற்காக பெண்கள் திருப்பாவை பாடுவது மார்கழி மாதத்தில்தான் என்பது சிறப்பம்சமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications