பாட்டியிடம் சுண்டல் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காத பெருமாள்! இன்று வரை ஓடி ஒளியும் சுவாரஸ்ய கதை
திருப்பதி: ஒரு பாட்டியிடம் காசு கொடுக்காமல் சுண்டல் வாங்கி சாப்பிட்ட பெருமாள் இன்றும் அந்த பாட்டி இருந்த இடத்தை கண்டால் ஓடுவதும் மறைவதுமாக இருக்கிறார். இந்த கதை உங்களுக்கு தெரியுமா? பெருமாளின் திருவிளையாடலை பார்க்கலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெருமாள் வீதியுலா நடந்தது. அப்போது அசுவ சாலையை ஊர்வலம் அடைந்ததும் வாத்தியங்கள் எல்லாம் இசைக்காமல் நிறுத்திவிட்டனர். அது வரை அசைந்து ஆடி வந்த பெருமாள், அந்த சாலையை பார்த்ததும் அவசர அவசரமாக ஓடினார்.

இதை பார்த்த பலருக்கு பெருமாளின் ஊர்வலம் ஏன் இப்படி ஓடுகிறது என அருகில் இருந்தவர்கள் விசாரித்தனர். அப்போதுதான் பெருமாள் அந்த பாட்டியிடம் சுண்டலை சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் ஓடி ஒளிவது தெரியவந்தது. இது என்ன கதை என்பதை பார்க்கலாம்.
திருப்பதி மலை அடிவாரத்தில் சந்திரகிரி என்ற ஒரு தொகுதி உள்ளது. இந்த தொகுதி தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுக்குள்பட்ட தொகுதியாகும். இதில் மங்காபுரம் என்ற கிராமமும் உண்டு. இங்கு ஆதரவற்ற பாட்டி ஒருவர் சுண்டல் விற்றுக் கொண்டிருந்தார். திருமலைக்கு செல்ல நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது.
அப்போது வாகனம் எல்லாம் இல்லை நடந்துதான் ஏற வேண்டும். இந்த கூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி, அங்கிருந்தவர்கள், "எங்கு செல்கிறீர்கள்" என கேட்டார். அதற்கு அவர்கள், "என்ன பாட்டி உங்களுக்கு இது கூட தெரியாதா ? அண்டத்தை காக்கும் பெருமாளை தரிசிக்க செல்கிறோம்" என்றனர். உடனே அந்த பாட்டி, "என்னையும் அழைத்துச் செல்கிறீர்களா" என கேட்டார்.
அவர்களும் அழைத்துச் சென்றனர். மலையில் பெருமாளை கண் குளிர தரிசனம் செய்த பாட்டிக்கு அந்த இடத்தை விட்டு வர மனசு வரவில்லை. இதனால் தன்னை அழைத்து வந்தவர்களிடம், "நான் இங்கேயே இருக்க வேண்டும். பெருமாளை நேரில் தரிசிக்க வேண்டும்" என கேட்டார். அதற்கும் அவர் அந்த கலியுக தெய்வத்தை நேரில் தரிசனம் செய்வது என்பது எங்களுக்கு தெரியாது. வேண்டுமானால் அதற்காக தவம் இருக்கும் முனிவர்களிடம் அழைத்துச் செல்கிறோம்" என கூறி, அந்த பாட்டியை அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர்.
முனிவர்களிடம் பாட்டி தான் ஏன் வந்தோம் என்ற காரணத்தை சொல்லாமல் அவர்களுக்கு தேவையான பணிவிடைகளை செய்து வந்தார். ஒரு நாள் முனிவர்களே "உங்களுக்கு என்ன வேண்டும்" என பாட்டியிடம் கேட்டனர். அதற்கு அந்த பாட்டி, "வேங்கடவனை நான் நேரில் தரிசிக்க வேண்டும்" என கேட்டார்.
இதையடுத்து திருப்பதியில் வேங்கடவன் தவம் இருந்த இடத்தில் ஒரு புற்று இருக்கிறது. அங்கு போய் தவம் செய்தால் பார்க்கலாம் என அவர்கள் கூறி அனுப்பினர். இதையடுத்து அந்த பாட்டியு் வேங்கடவனை சந்திக்க வெறுங்கையோடு போவதா என நினைத்து சுண்டலை செய்து கொண்டு தினமும் போனார். ஆனால் வேங்கடவன் வரவில்லை. பாட்டியின் பரிதவிப்பை பார்த்து மனமிறங்கிய பெருமாள், உடனே புற்றிலிருந்து வயதானவர் ரூபத்தில் தோன்றினார்.
அப்போது அவ்வழியாக செல்வது போல் சென்றார். ஆனால் பாட்டி அந்த முதியவரின் முகத்தை பார்த்து யார் என்பதை கண்டுபிடித்துவிட்டார். உடனே "நீங்கள் பார்ப்பதற்கு சோர்வாகவும் பசியுடனும் இருப்பது போல் தெரிகிறது, இந்தாங்க இந்த சுண்டலை சாப்பிடுங்கள்" என்றார். சுண்டலை சாப்பிட்டதும் கிளம்ப முயன்ற முதியவரை (பெருமாள்), அந்த பாட்டி "நில்லுங்கள், சுண்டல் சாப்பிட்டீங்களே காசு எங்க" என கேட்டார்.
அதற்கு பெருமாள், என்னாது காசா, சுண்டலுக்கு பணம் கொடுக்க வேண்டும் என நீங்கள் சொல்லியிருந்தால் நான் சாப்பிட்டிருக்கவே மாட்டேனே, நானே கடன்பட்டு கல்யாணம் செய்துக் கொண்டு இப்போது வரை வட்டி கட்டிக் கொண்டு வருகிறேன். இதில் அசல் எப்போது கட்டுவேன் என்றே தெரியாது, இதில் என்னிடம் ஏது காசு என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பாட்டி, விடாமல் பணம் கேட்டதை அடுத்து, அவரை சமாளிப்பதற்காக நாளை வந்து தருவதாக சொன்ன பெருமாள், அதன் பிறகு பாட்டி கண்ணில் படவே இல்லையாம். பாட்டி இருந்த இடம் வந்தாலே எங்கே காசு கேட்பாரோ என நினைத்து அன்று முதல் இன்று வரை ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications