பூமிக்கு 16 அடி ஆழத்தில் செம்பாலான மூலவர்..செவ்வாய் பலம் தரும் பாதாள செம்பு முருகன்! இத்தனை சிறப்பா?
திண்டுக்கல்: செவ்வாயின் பலத்தை பெறுவதற்கான ஒரு ஆலயம் என்றால் அது பாதாள செம்பு முருகன் ஆலயம். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் நல்லா இருந்தால் தான் பூமி சொத்து எல்லாம் வரும் பெரிய பதவிகள் பொறுப்புகள் வரும். எல்லா வகையிலும் சுகங்களையும் சந்தோசத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றால் செவ்வாய் நல்லா இருக்க வேண்டும்..
அந்த செவ்வாயின் பலத்தை பெறுவதற்கான கோவில் திண்டுக்கல் அருகேயுள்ள பாதாள செம்பு முருகன் . இந்த முருகப் பெருமானை வணங்குவதால் அனைத்தும் நல்லதாகவே நடைபெறுகிறது. குறிப்பாக கிழக்குப் பார்த்த வகையில் ஸ்ரீ பைரவரும் இந்த ஆலயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் கருங்காலி மாலைகள் வழங்கப்படுகின்றன. இங்கே, சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பாதாள செம்பு முருகன்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் பூமிக்கு அடியில், செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் பாதாள செம்புமுருகன் என்ற பெயர் உருவானது. பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர்.

சங்கிலி கருப்புசாமி : கோவிலின் முன்புறம் கிழக்கு நோக்கியபடி காவல்தெய்வமான சங்கிலி கருப்புசாமி கம்பீரமாக வீற்றிருக்கிறார். 15 அடி உயரம் கொண்ட இந்த சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டது. இங்கே, கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் கருங்காலி வேல், சந்தன வேல் ஆகியவற்றை முருகனுக்கு சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

கருங்காலி மாலை: இங்கு வழங்கப்படும் கருங்காலி மாலைகளை அணிவதன் மூலம், பஞ்ச பூதங்களின் துணை கிடைக்கும் என்றும் எதிர்மறை சக்திகள் விலகும் எனவும் குழந்தை பேறு, தொழிலில் முன்னேற்றம், வீடு, நிலம் சொத்துகள் கிட்டும் என்றும், கல்வி ஞானம் அதிகரிப்பதுடன் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இதுமட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு, மன இறுக்கம் விலகி உள்ளுணர்வு மேம்பாடு அடைவதுடன், ரத்த அழுத்தம் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.

பழமையான பொருட்கள்: மேலும் மிக முக்கியமாக இதுவரை பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணாத சுமார் 400க்கும் மேற்பட்ட 600 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்த பொருட்களான முன்னோர்கள் போருக்கு பயன்படுத்திய வாள், கேடயங்கள், 800 ஆண்டுகள் பழமையான மான் கொம்பு , ஹரியானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கருங்காலிக் கட்டைகளால் செய்யப்பட்ட பெட்டி, 600 ஆண்டுகள் பழமையான சிறிய அளவிலான குபேரன் மற்றும் காளியம்மன் சிலை, யானை தந்தங்களால் செய்யப்பட்ட குறியீடுகள் பொறித்த சிறிய பொருட்கள் உள்ளன.

மருத்துவக் குறிப்புகள்: மேலும் மருத்துவம் சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள், முன்னோர்கள் பயன்படுத்திய மதுக் குடுவைகள், மருத்துவத்திற்காக பயன்படுத்திய குடுவைகள் மற்றும் திருநீறு தயாரிப்பதற்காக பயன்படுத்திய குடுவைகள், இந்த ஒவ்வொரு குடுவையிலும் ஒவ்வொரு குறியீடுகளை பொறுத்து பயன்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. அத்துடன், யானை தந்தத்தால் செய்யப்பட்ட மிகச் சிறிய அளவிலான குடுவையில் சக்தி வாய்ந்த மருந்துகளை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும், முன்னோர்கள் பயன்படுத்திய வெள்ளி ஆபரணங்கள், நாணயங்கள், கைக்கத்தி, விலைமதிப்பில்லாத சிறிய வடிவிலான பல்வேறு வகையான செம்பு சிலைகள் மற்றும் வெண்கல சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கோவிலின் ஆதீனம்: அது மட்டுமில்லாமல், முன்னோர்கள் காலத்தில் பதியப்பட்ட பத்திரங்கள், உள்ளிட்ட பழமையான பொருட்கள் பாதாள செம்புமுருகன் கோவில் ஆதீனம் அறையில் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தருணம் வரும்பொழுது கண்காட்சிக்காக வைக்கப்படும் என இந்த கோவிலின் ஆதீனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications