மார்கழி பௌர்ணமி.. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல முடியுமா? வனத்துறை அறிவிப்பு என்ன?
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல டிசம்பர்27 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளம் நாட்களில் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளிப்பதில்லை.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதியன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மார்கழி மாத பிறப்பையொட்டி ஒரு நாள் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் மலையேறினர். இதனிடையே சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது.
திடீரென கொட்டிய கனமழையால், மலைப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டது. இதனால் மலைக்கோயிலில் உள்ள 200க்கும் மேற்பட்ட பக்தர்களை கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து அறிவுறுத்தினர். வனத்துறை அறிவிப்புக்கு முன்பாக கீழே இறங்க தொடங்கிய பக்தர்களின் பாதுகாப்புக்காக ஓடை பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பக்தர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதனிடையே மார்கழி பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை வனத்துறையினர் ரத்து செய்துள்ளனர்












Click it and Unblock the Notifications