காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்..தேரோட்டம் கோலாகலம்..எதிரொலித்த அத்தி வரதா முழக்கம்
காஞ்சிபுரம்: வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. வரதா..அத்தி வரதா என முழக்கமிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உலகப் பிரசித்தி பெற்றது. மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார். பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்.

மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை எனப்படும் அத்திகிரி மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்ப்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடை வரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றிருக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம்.
மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரத்தாழ்வர் சன்னிதி உள்ளது. கோயில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. அத்தி வரதர் எனப்படும் மரத்தல் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.
அத்தி வரதர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 3வது நாள் கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. பத்து நாள் பிரம்மோற்சவ விழாவில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு நாளும் வரதராஜ பெருமாள், தங்க சப்பரம், சேஷ வாகனம், தங்கப் பல்லக்கு, சிம்ம வாகனம், சூரிய பிரபை, ஹனுமந்த வாகனம், சந்திரப் பிரபை, யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், புண்ணியகோடி விமானம், வெட்டிவேர் சப்பரம் ஆகியவற்றில் வலம் வந்து அருள்பாலித்தார் வரதராஜ பெருமாள்.
விழாவின் 7ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருளினர்.
ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் தேரோட்டம் தொடங்கியது. இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் இழுத்து சென்றனர். இதில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... அத்தி வரதா என முழக்கமிட்டு பயபக்தியுடன் வழிபட்டனர்.

திருத்தேர் காந்திரோடு தேரடியில் புறப்பட்டு மூங்கில் மண்டபம்,பஸ் நிலையம், சங்கரமடம், பூக்கடை சத்திரம் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேரடியில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் 9வது நாள் இக்கோயிலில் தீர்த்தவாரி நடைபெறும். அதையொட்டிக் கோயில் உள்புறம் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் வரதராஜ பெருமாள் எழுந்தருளுவார். அங்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். பின்னர் அங்கிருந்து வரதராஜ பெருமாள் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாகச் சென்று குளத்தில் இறங்குவார். வரதராஜர் குளத்தில் நீராடியதைத் தொடர்ந்து, அங்கு குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் இறங்கி நீராடி மகிழ்வர். பிரம்மோற்சவ விழாவின் 10வது நாள் கொடி இறக்கப்பட்டு, அன்றுடன் விழா நிறைவு பெறும்.












Click it and Unblock the Notifications