திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி.. சூரனை சம்ஹாரம் செய்யும் சுப்ரமணியர்.. போருக்காக யாகம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நாளை 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு ஆறுநாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திருவிழாக்கள் என்றாலே கொடியேற்றம் நடைபெறும் இது போருக்காக நடைபெறும் விழா என்பதால் யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. ஆறு நாட்களும் யாகம் நடைபெறும்.
அழகன் முருகன்: தமிழ் கடவுள் முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக ஆறு நாட்கள் கொண்டாடப்படும். சூரனின் ஆணவம் அழிக்க அவதரித்தவர் கந்தன். பெண்ணின் கர்ப்பத்தில் உதித்தவரால் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரம் வாங்கிய சூரபத்மன் தேவர்களை கொடுமை செய்ய அவனை சம்ஹாரம் செய்வதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளாக உருவாகி அதுவே கந்தனாக உருமாறினார் என்கிறது ஸ்கந்த புராணம்.

கந்தனாகவும், கார்த்திக்கேயனாகவும், சுப்ரமணியராகவும் முருகன் குன்று இருக்கும் இடமெங்கும் குமரனாக போற்றப்படுகிறார். முருகன் என்றால் அழகு என்று அர்த்தம். இவர் தமிழர்களின் கடவுள் மட்டுமல்ல இரண்டாம் தமிழ் சங்கத்தின் தலைவராகவும் போற்றப்படுகிறார். அகத்தியருக்கே தமிழ் கற்றுக்கொடுத்தவராம் இந்த அப்பனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சுப்பன். முருகனும் தமிழும் ஒன்றுதான் என்பதை இவரை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
முருகனின் அவதார நோக்கமே சூரபத்மன் அவரது சகோதரர்களை அழிப்பதுதான். அதற்காகவே சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான அக்னியில் உதித்தவர். ஆறு அக்னி குஞ்சுகளை சரவணப்பொய்கையில் உள்ள தாமரை மலர்களில் கங்கை அன்னை கொண்டு போய் சேர்க்க அவை ஆறு குழந்தைகளாக உருமாறின. கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டான் கார்த்திக்கேயன். ஆறுமுகமாக இருந்த கந்தன் அன்னை பார்வதியின் கரம் பட்டு ஒருமுகமாக அழகான முருகனாக உருமாறி சக்தி மைந்தனாக மாறினார்.
விசாகம் நட்சத்திர நாளில் உதித்த இந்த விசாகன் தேவர்களின் சேனாதிபதியாக மாறி அன்னை சக்தியின் கையில் வேல் வாங்கி சிங்கார வேலனாக படையெடுத்துச்சென்றார். வேல் வேல் வெற்றி வேல் என்ற முழக்கம் எங்கும் எதிரொலிக்க திருச்செந்தூரில் கடலாக மாமரமாக உருமாறி மாய வித்தை காட்டிய அசுரர்களை வதம் செய்து வேலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக்கொண்டார். இதன்மூலம் பகைவனுக்கும் அருளுபவர் முருகன் என்பதை அனைவருக்கும் உணரவைத்தவர்.
அசுரர்களை அழித்து தேவர்களை காத்த முருகனுக்கு தேவேந்திரன் தனது மகள் தேவயானையை திருமணம் முடித்துக்கொடுத்து மருமகனாக ஆக்கிக்கொண்டார். திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணியர் தேவயானை திருமணம் ஒரு பங்குனி உத்திரம் நாளில் நடந்து முடிந்தது. அதே முருகன்தான் சூரனை சம்ஹாரம் செய்த கோபம் தனிவதற்காக திருத்தனி சென்று அங்கே குறவர் பெண்ணான வள்ளியை மணம் செய்து கொண்டார். வள்ளி தெய்வானையை மணந்த முருகன் இருதாரம் கொண்டவன் என்று அனைவராலும் பேசப்பட்டாலும் அதற்கும் ஒரு காரணம் உண்டு. இச்சா சக்தியாகிய வள்ளியும் கிரியா சக்தியாகிய தெய்வானையும் ஞானசக்தியாகிய முருகனை திருமணம் கொண்டிருக்கின்றனர்.
இந்த புராண நிகழ்வை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. ஐப்பசி மாதத்தில் அமாவாசைகளில் பிறகு வளர்பிறை பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்கள் விரதம் இருப்பார்கள். ஆறாம் நாள் சூரசம்ஹாரம் நடைபெறும்.
'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்று நம் வீட்டு பெரியவர்கள் பழமொழி கூறுவார்கள். முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் இருந்தால் அந்த முருகனே கருப்பையில் பிள்ளையாய் வளர்வான் என்பதைத்தான் அப்படி கூறியிருக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளி இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் 13ஆம் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. சஷ்டி விழா தொடங்கியதும், 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பானது. இங்கு நடைபெறும் சூரசம்ஹார விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். கோவிலினில் அருகினில் கூடிய கூட்டம் தலையா, கடல் அலையா என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு பக்தர்கள் கடற்கரையில் குவிந்திருப்பார்கள். 18ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications