நோய் தீர்க்கும் மண்டைக்காடு பகவதி அம்மன்..ஒடுக்கு பூஜையை காண குவியும் பக்தர்கள்..குமரியில் விடுமுறை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஒடுக்கபூஜையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் ஒடுக்கபூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.
மண்டைகாடு பல நூற்றாண்டுகள் முன்பு இந்த பகுதி அடர்ந்த காட்டு பகுதியாக இருந்ததாகவும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வரும் பகுதி அதனால் மந்தைகாடு என்ற பெயரால் இந்த இடம் அழைக்கப்பட்டது.

நோய்கள் நீக்கிய சாது
இந்த கோவில் பற்றிய தகவல்கள் முகநூல்களில் எழுதப்பட்டுள்ளன. புராண தகவல்கள், ஓலைச்சுவடிகளில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவின. அதை தீர்க்க சாது ஒருவர் ஸ்ரீசக்கரம் வரைந்து அதில் தினமும் பூஜை செய்து இறை சக்தி கொண்டு கொடிய நோய்களை அந்த பகுதியில் இருந்து நீக்கினார். பின்பு அந்த சாது ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் உடன் பல சித்து வேலைகளை செய்து காட்டினார். பின்பு அந்த இடத்தின் அருகிலேயே ஜீவசமாதி ஆகி விட்டாராம்.

மண்டைக்காடு பகவதி அம்மன்
நாளடைவில் அந்த சக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்ததாகவும் ஆடுகளை மேய்ந்து வந்தவர்கள் தெரியாமல் மிதித்து விட அதில் இருந்து இரத்தம் கொட்டியது . இந்த தகவலை மன்னருக்கு தெரிவிக்கவே அவர் வந்து புற்றில் ரத்தம் வடிதை பார்த்து விட்டு எதோ தெய்வ குற்றம் நிகந்து விட்டதாக அச்சம் அடைந்தார்.
அன்றிரவு மன்னர் கனவில் பகவதி அம்மன் தோன்றி பயப்பட வேண்டாம் இங்கு வாழும் மக்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களை சுபிட்சமாக வாழ வைக்கவே நான் இங்கே குடிகொண்டுள்ளேன். இன்று முதல் என்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிவேன் என கூறி மறைந்தார். அடுத்த நாள் மன்னர் பரிவாரங்களுடன் வந்து புற்றில் சந்தனம் தடவி வணங்கினார். பிறகு மண் புற்றை சுற்றி கூரை வேய்து தினமும் பூஜைகள் நடத்தப்பட்டது. இவ்வாறு இந்த கோவில் உருவானதாக கல்வெட்டுக்கள் மூலமும் ஓலைச்சுவடிகள் முலமும் தெரிவிக்கின்றன.
இது பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. கேரளாவில் பகவதி அம்மன் சந்திதியில் பெண்கள் பொங்கலிடுவதை போல மாசி மாதம் ஆயிரக்கணக்காக பெண்கள் பொங்கல் இட்டு வழிபாடு செய்வார்கள் .
கேரள பெண்கள் 41நாள் விரதம் இருந்து இருமுடி எடுத்து வந்து பொங்கலிட்டு வழிபாடு செய்வார்கள். இதனாலேயே இதற்கு பெண்கள்சபரிமலை என்ற பெயர் உண்டு. தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இந்த வருடத்திற்கான மாசிக்கொடை விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம்
நேற்றைய தினம் மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா நடைபெற்றது. சந்தனக்குடம் பவனி நடைபெற்றது.
9 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்றது. இதனையடுத்து அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்தார். அப்போது, பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதல் நடைபெற்றது.

ஒடுக்கு பூஜை
திருவிழாவின் 10வது நாளான இன்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு குத்தியோட்டம் நடைபெற்றது. நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை நடைபெற உள்ளது.

பகவதி அம்மனுக்கு படையல்
இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் 20க்கும் மேற்பட்ட உணவு பதார்த்தங்கள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்படும். பின்னர் சன்னதி அருகாமையில் உள்ள சாஸ்தான் கோவில் அருகில் இருந்து ஒடுக்கு பவனி புறப்படும். பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளை துணிகளால் மூடி ஊர்லமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருவார்கள். பின்னர் கோவிலை ஒரு முறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும்.

குவியும் பக்தர்கள்
பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படும். தொடர்ந்து கும்பளங்காய் மஞ்சள் நீர், சுண்ணாம்பு, பூ ஆகிய பொருட்களால் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. புறைமேளம் அடிக்கப்பட்டு நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடைபெறும். ஒடுக்கு பவனியின் போதும் பூஜை நடக்கும் போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பூரணமான அமைதி சூழலில் எந்தவித ஓசையும் இன்றி காணப்படும். பின்னர் கொடி இறக்குதலும் நடைபெறும். ஒடுக்கு பூஜையை காண கோவில் வளாகத்திலும் ஒடுக்கு பவனி வரும் வளாகத்திலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நிற்பார்கள். இதற்காக மண்டைக்காட்டில் இப்போதே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நோய்கள் தீர்க்கும் அம்மன்
திருவிழா நாட்களில் மட்டுமல்லாது ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும், கடைசி செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்த அம்மனிடம் வேண்டிக்கொண்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலில் கை, கால், தலை போன்ற உடல் உறுப்புகளை மரத்திலும், வெள்ளியிலும் செய்து விற்பனை செய்கிறார்கள். உடல் நலக்குறைவு உள்ளவர்கள், அதனை வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தடவி கோவில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பச்சரிசி மாவு, வெல்லம் கொண்டு மண்டைஅப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்தால் தலைவலி குணமாகும். அதிகாலை 5 மணி முதல் காலை 12.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.












Click it and Unblock the Notifications