திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்.. பலத்த பாதுகாப்பு
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவில் பங்கேற்கவும் பவுர்ணமி கிரிவலம் வரவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்கி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீப திருவிழா: திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டியில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 17ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வருகின்றனர். வியாழக்கிழமையன்று மகா தேரோட்டம் நடைபெற்றது.
பரணி தீபம்: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம்,விஷ்ணு தீபம் உள்ளிட்ட ஐந்து தீபங்கள் ஏற்றப்படும். அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாகவும் அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவிலின் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்படும்.
மலை மீது மகாதீபம்: நாளைய தினம் மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக 4,500 கிலோ முதல்தர தூய நெய் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மகாதீபம் ஏற்றுவதற்கான ஐந்தரை அடி உயரத்தில் செப்பினால் உருவான மகாதீப கொப்பரை புதிய வண்ணம் தீட்டப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் திருவுருவத்துடன் தயார் நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்காக 1,200 மீட்டர் துணி திரி, உபயதாரர்கள் மூலம் நேற்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
மகாதீப கொப்பரை: இந்நிலையில், மகாதீப கொப்பரைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை, தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சேர்க்க உள்ளனர். அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் மகாதீப கொப்பரைக்கு பாரம்பரிய வழக்கப்படி, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.
3000 கிலோ பசு நெய்: ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். நாளைய தினம் மலை மீது ஏற்றப்படும் மகாதீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். மகா தீப திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபத்திருவிழாவை தரிசிக்க இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மகா தீபத்திருவிழா பாதுகாப்பு பணிகளை தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் இன்று மாலை ஆய்வு செய்ய இருக்கிறார். 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில், மாடவீதிகள், கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமராக்கள்: 120 சிறப்பு கமாண்டோ படை வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்களுடன் 600 தீயணைப்பு வீரர்கள், 150 வனத்துறையினர் ஆகியோரும் அவசரகால மீட்புப்பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 57 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 85 இடங்களில் காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயில், மாடவீதிகள், நகரின் முக்கிய வீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் 623 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய திருவிழாவை காண தயாராகி வருகிறது திருவண்ணாமலை.












Click it and Unblock the Notifications