குத்து விளக்கு...மறந்தும் கூட இந்த தவறு செய்யாதீர்கள்..தனயட்சணி கோபத்திற்கு ஆளாகிவிடுவீர்கள்
சென்னை: நம்முடைய வீட்டில் நாம் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட வறுமையை ஏற்படுத்தி விடும். புனிதமான பூஜை அறையில் ஏற்றி வைக்கும் குத்து விளக்கு, காமாட்சி விளக்குகளை நாம் துலக்கி வைக்கும் போது அதற்கான நாளையும் பார்க்க வேண்டும். சரியான நாளில் விளக்கு துலக்கினால் மட்டுமே அதற்கேற்ற சரியான பலனை அடைய முடியும். எந்த நாட்களில் குத்துவிளக்கை துலக்கலாம் எந்த நாட்களில் குத்து விளக்கை துலக்கக் கூடாது என்று பார்க்கலாம்.
நம்முடைய வீட்டின் பூஜை ரூமில் உள்ள குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு முக்கியமான காரணம் உண்டு. ஞாயிறு விளக்கு துலக்கினால் கண் நோய் குணமாகும் பார்வை பிரகாசம் அடையும். திங்கள் மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளரும். வியாழன் விளக்கு துலக்கினால் குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி கிடைக்கும். சனிக்கிழமை விளக்கு துலக்கினால் வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு கிடைக்கும் இழந்த பொருள் கிடைக்கும்.

திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
நம்முடைய வீட்டில் நாம் தினசரியும் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கேற்றினால் மனம் அமைதியடையும். வீடே மங்களகரமாக இருக்கும். விளக்கேற்றுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. நம்முடைய இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் தீபம் ஏற்றலாம். காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமையல் அறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வத்துக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய் ஏற்றலாம். மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றலாம். எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணை விளக்கு ஏற்றலாம்.
பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். இழந்த செல்வத்தையும் மீட்கலாம். இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் நம்முடைய காரியங்கள் வெற்றியடையும். எனவே நம்பிக்கையுடன் எந்த பரிகாரத்தையும் செய்யுங்கள் கை மேல் பலன் கிடைக்கும்.
விளக்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் தாம்பத்திய சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும். பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது நல்லது.












Click it and Unblock the Notifications