மதுரையில் தொடங்கியது மீனாட்சியம்மனின் ஆட்சி.. இன்று திக்விஜயம்! சித்திரை திருவிழா கோலாகலம்
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. பட்டத்து அரசியான பின்பு சிவபெருமானை அம்மன் போருக்கு அழைக்கும் நிகழ்வை நினைவூட்டும் திக்கு விஜயம் இன்று இரவில் மாசி வீதிகளில் நடக்கிறது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார்.

சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வருவதாகவும், ஆவணி முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதையொட்டிதான் சித்திரை திருவிழாவில் மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் விழா கோயிலில் உள்ள அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க ராயர் கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ராயர் கிரீடம் அம்மனுக்கு சாற்றப்பட்டு, திருமலைநாயக்கர் வழங்கிய செங்கோல் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மீனாட்சியம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை நினைவுப்படுத்தும் வகையில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா அம்மன் சன்னதி ஆறுகால பீடத்தில் தொடங்கியது. காப்பு கட்டிய வைரம் என்ற பைரவ சுந்தர பட்டர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் பட்டாபிஷேக பூஜைகளை நடத்தினர்.
இரவு 7.45 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடம் சூட்டி கோலாகலமாக விழா நடந்தது. தொடர்ந்து, நவரத்தினங்கள் பதித்த தங்க செங்கோலும் வழங்கப்பட்டது. அம்மனுக்கு மீன்கொடியும் வழங்கப்பட்டது. இளஞ்சிவப்புடன் கூடிய நீல நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு, பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது.
மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோலை அம்மனின் பிரதிநிதியாக கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் பெற்றுக்கொண்டார். செங்கோலுடன் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார்.
பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மற்றொரு வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். பட்டத்து அரசியான மீனாட்சியை காண 4 மாசி வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் மூலம் மதுரையில் நேற்று முதல் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியது.
பட்டத்து அரசியான பின்பு சிவபெருமானை அம்மன் போருக்கு அழைக்கும் நிகழ்வை நினைவூட்டும் திக்கு விஜயம் இன்று இரவில் மாசி வீதிகளில் நடக்கிறது. நாளை சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருக்கல்யாணத்தை காண தரிசன கட்டணமாக ரூ.500, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட் பெற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வடக்கு கோபுரம் வழியாகவும், இலவசமாக திருக்கல்யாணத்தை காண்பவர்கள் தெற்குகோபுரம் வழியாகவும், மிக முக்கிய பிரமுகர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள். 22 ஆம் தேதி சித்திரை வீதிகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications