மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா! அசைந்தாடும் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக தேரோட்டம் மாசி வீதிகளில் நடைபெற்று வருகிறது. தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகிறார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நேற்றைய தினம் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.

தங்கை மீனாட்சியை சொக்கநாத பெருமானுக்கு பவளக்கனியாய் பெருமாள் தாரை வார்த்து கொடுத்தார். மீனாட்சிக்கு தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி, பச்சை கல் பதக்கம் அணிவிக்கப்பட்டது.
சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இந்த நிலையில் 11 ஆவது நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும் மீனாட்சி சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகிறார்கள். தேரானது மாசி வீதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
முருகனும், விநாயகரும் நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கிறார்கள். அசைந்தாடும் தேரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்வையிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications