
மகா சிவராத்திரி..5 சிவாலயங்களில் விடிய விடிய அபிஷேகம்..கலைநிகழ்ச்சி.. அமைச்சர் சேகர்பாபு உத்தரவு
சென்னை: மகா சிவராத்திரி பெருவிழாவை தமிழ்நாட்டில் உள்ள 5 முக்கிய சிவாலயங்களான மயிலாப்பூர் கபாலீஸ்சுவரர் திருக்கோயில், கோவை பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி, நெல்லையப்பர் திருக்கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்களில் சிறப்பாக நடத்த அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும். ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மகாசிவராத்திரி பெருவிழா வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. விடிய விடிய நான்கு கால அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 5 முக்கிய சிவாலயங்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆய்வு கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, திருக்கோயில்கள் சார்பில் இறையன்பர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சமயம் சார்ந்த விழாக்களும் சிறப்பாக ஏற்பாடு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.
2022 - 2023 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது "சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா கடந்த ஆண்டு வெகுசிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் 5 சிவாலயங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், கோவை, பேரூர், அருள்மிகு பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா நடத்தப்படவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகத்தில் இந்தாண்டு திருக்கோயில்கள் சார்பில் கொண்டாடப்படவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர், மகா சிவராத்திரி பெருவிழா நடைபெறவுள்ள அரங்குகளை இறை உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அமைத்தல், இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், பக்தர்கள் பயன்பெறும் வகையில் மங்கள இசை, சமய பெரியோர்களின் அருளாசி, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பக்தி இசை, பட்டிமன்றம், இசை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துதல், பழங்கால இசைக் கருவிகளை அரங்குகளில் காட்சிப்படுத்துதல், ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் அமைத்தல், பிரசித்தி பெற்ற திருக்கோயில்களிலிருந்து பிரசாதங்களை பெற்று விநியோகித்தல் போன்ற பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் இதர துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு, பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து பாராட்டும் அளவிற்கு சிறப்பாக செய்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
வீடு கட்ட வேண்டுமா?..பழனி தண்டாயுதபாணியை எந்த கோலத்தில் தரிசித்தால் என்ன நன்மை?
மகா சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணம் கூறுகிறது. உரைக்கிறது. சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால் நோய்கள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னதானம் செய்யலாம்.