திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 27: கடவுளிடம் அதை கொடு, இதை தா என கேட்கக் கூடாது!
திருப்பாவை - பாடல் 27
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: எதிரிகளை வெல்லும் கோவிந்தனே! உனது புகழை பாடி அருள் பெறுவதற்காக இங்கு வந்தோம். அருட்செல்வத்துடன் இந்த உலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! பொருள் இருந்தால்தானே நாடே புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, காலில் அணியும் பாடகம் உள்ளிட்ட அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில் கூட்டம் கூட்டமாக உன்னுடன் அமர்ந்து நெய் ஊற்றி சோறு உண்போம். அப்போது கையில் நெய் ஒழுகும். அதை பார்த்து நீ மனம் குளிர வேண்டும்.

விளக்கம்: கூடாரை வெல்லும் என்ற சொல்லில் இருந்து கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போதும் பெருமாள் கோயில்களில் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் - 7
அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பாடல் பொருள்: தேன் சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவபெருமானே! திருப்பெருந்துறையில் வசிக்கும் உன் பெயர் சொன்னால் போதும் அது பழம் போல் இனிக்கிறதே! பால் போல் சுவையாக இருக்கிறது. தேவர்களுக்கு கூட காட்சி தராத நீ எங்கள் முன்னால் இருக்கிறாயே!
விளக்கம்: கடவுளிடம் அதைக் கொடு, இதைக் கொடு என கேட்பதை விட எது சரியென்று படுகிறதோ அதை செய் என கேட்பது மேலான கோரிக்கையல்லவா, அவனுக்கு தெரியும். நமக்கு என்ன தர வேண்டுமென்று அவனுக்கு தெரியும். அவன் கொடுப்பதை ஏற்போம்.


Click it and Unblock the Notifications
