மாசி மகம்.. ஜெகம் ஆளும் யோகம் தரும் குல தெய்வ வழிபாடு.. தானம் தர மறக்காதீர்கள்
சென்னை: தமிழ் மாதங்களிலேயே மிகவும் சிறந்த மாதம் மாசி மாதம். இம்மாதம் நீராடலுக்கு உகந்த மாதமாகப் பாரக்கப்படுகிறது. காரணம், இம்மாதத்தில் மகம் நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வருவது தான். மாசி மகம் நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வதன் மூலம் சுப காரிய தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். கோடீஸ்வர யோகமும் தேடி வரும்.
மாசி மகம்: மாசி மகம் நாளில் நீராடினால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மாசி மகம் பிப்ரவரி 24ஆம் தேதி சனிக்கிழமை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்துக்கள் விரதமிருந்து, நதிகள், கடல், நீர்நிலைகளில் நீராடி கோயில்களுக்கு சென்று வழிபடுவதுண்டு. அதே போல் புகழ்பெற்ற கோயில்களில் இருந்து மூலவர்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வந்து தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

கோடீஸ்வர யோகம்: மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன் கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது.
அரசாளும் தகுதி: இந்த நாளில் பிறந்தவர்களுக்கு முன்னோர்களின் பரிபூரண அருளும் அரசாளும் தகுதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பௌர்ணமி யோகம் கோடிகளை அள்ளித்தரும். மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து, சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
புனித நீராடல்: மாசி மகத்தன்று பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும். பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். இதனால், மாசிமகத் தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும்.
பாவம் நீங்கும்: மாசி மகம் நாளில் திருநல்லூர் கோயிலில் உள்ள சப்தசாகர தீர்த்தத்தில் நீராடினால், உன்னுடைய பாவம் விலகும், என்று அசரீரி கேட்க, பாண்டவர்களின் தாய் குந்திதேவி, அவ்வாறே அங்கு சென்று நீராடியதால் கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்கியது என்பது ஐதீகம். இத்தீர்த்தம் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.
கும்பகோணம் மகாமகம் குளம்: மாசி மகம் என்ற உடன் முதலில் நம் நினைவுக்கு வருவது, கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடும் வைபவமும், வட மாநிலங்களில் பெருவாரியாகக் கொண்டாடப்படும் கும்பமேளா நிகழ்ச்சியும் தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாசி மகம் நாளன்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கும்பகோணத்திற்கு வந்து மகாமகம் குளத்தில் இறங்கி நீராடுவதும், பலர் தலையில் நீரைத் தெளித்துக்கொள்வதும் உண்டு.
முன்னோர்களுக்கு பூஜை: மகம் நட்சத்திரத்தை நம் முன்னோர்கள் பித்ருதேவ நட்சத்திரம் என்று குறிப்பிட்டுள்ளனர். காரணம், இந்துக்கள் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் பித்ருக்களை வணங்கி அவர்களின் அசீர்வாதம் கிடைத்த பின்பு தான் சுபகாரியங்களைத் தொடங்குவார்கள். ஆகவே, இம்மாதத்தில் பித்ருக்களுக்கு பூஜை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
மாசி மகம் நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பு. அதோடு, நம்முடைய முன்ஜென்ம கர்ம வினைகளைப் போக்கிக் கொள்ள மாசி மகம் நாளில் புனித நீராடினால், அனைத்து தோஷங்களும் நீங்கும். சுப காரிய தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். கோடீஸ்வர யோகமும் தேடி வரும். நாளை மாசி மகம் என்பதால் உங்களால் முடிந்த அளவிற்கு தானம் கொடுங்கள். அன்னதானம் செய்வது சிறப்பானது.












Click it and Unblock the Notifications