மாசி மகம்.. மாசி பவுர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம்.. வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் என்ன நன்மை
திருவண்ணாமலை: மாசி மாதப் பெளா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 04:22 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை மாலை 06:18 மணி வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23ம் தேதி மாலை 4.22 மணிக்கு தொடங்கி 24ம் தேதி மாலை 6.18 மணிக்கு நிறைவடைகிறது.

எனவே, 23ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். ஞாயிற்று கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும். திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும்.
புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். அஷ்டமி நாளில் கிரிவலம் வந்தால் தீவினைகள் போகும்.
பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் நன்மைகள் அதிகம். அதே போல குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர, கடன் தொல்லையில் இருந்து விடுபட, குழந்தை பாக்கியம் கிடைக்க செல்வம் சேர, வறுமை அகல, பாவங்கள்- சாபங்கள் தீர மாசி மகம் நாளில் கிரிவலம் வர வேண்டும்.
மாசி மகத்தன்று பெளர்ணமி கிரிவலம் வருபவர்களுக்கு மறுபிறவி என்பது ஏற்படாது. அது மட்டுமின்றி, அவர்கள் வாழும் வாழும் நாட்களில் அனைத்து விதமான நலன்களையும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ முடியும். மாசி மகம் நாளில் திருவண்ணாமலை திருத்தலம் மட்டுமின்றி, திருப்பரங்குன்றம், பழநி உள்ளிட்ட மலை உள்ள திருத்தலங்களிலும் கிரிவலம் வந்து வழிபடலாம். நினைத்த காரியம் நிறைவேறும்.
கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னதானம் கொடுப்பது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், முன்ஜென்ம பாவங்கள் அகலும் கிரிவலம் வருவதன் முழு பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications