Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்காளம்மனுக்கு அமாவாசையில் ஊஞ்சல்... கொட்டும் மழையிலும் அணையாத தீபங்கள்.. சிலிர்த்த மேல்மலையனூர்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: ஐப்பசி அமாவாசை நாளில் அன்னபூரணியாய் காட்சி அளித்த மேல்மலையனூர் அங்காளம்மனை ஊஞ்சலில் வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடினர். கொட்டும் மழையிலும் கூடியிருந்த பக்தர்கள் தேங்காயில் தீபம் ஏற்றி அங்காளி தாயே என்று வணங்கினர்.

மழை கொட்டிய நிலையிலும் ஏற்றி வைத்த விளக்குகள் எதுவும் அணையாமல் எரிந்தது பக்தர்களை சிலிர்க்க வைத்தது.

Melmalayanur Angalamman Aaipasai Amavasai Unjal Utsavam Thalatu


அங்காளம்மன்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்த அம்மன் இங்கு வந்தது பற்றி புராண கதை ஒன்று உள்ளது.

புராண கதை: ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மன், திலோத்தமை என்ற தேவ மங்கையின் அழகில் மயங்கி அவளைத் துரத்தினான். திலோத்தமை கயிலாயத்தில் அடைக்கலம் புகுந்தாள். பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரம்மனின் ஆணவத்தை அழிக்க, விஷ்ணுவின் ஆலோசனைப்படி, பிரம்மனது ஒரு தலையை சிவபெருமான் வெட்டி எறிந்தார். ஆனால், அது மீண்டும் மீண்டும் முளைக்கவே, அதனைத் தன் கையிலேயே தாங்கிக் கொண்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.
சிவனின் உருவமே பொலிவு இழந்தது.

சரஸ்வதியின் சாபம்: பிரம்மனின் மனைவியான சரஸ்வதி சாபமிடவே, சிவபெருமான் பிச்சை எடுக்கும் கோலத்தையும், அன்னை பார்வதி அலங்கோல வடிவத்தையும் பெற்றனர். இதையடுத்து விஷ்ணு, தன் தங்கை பார்வதியிடம், 'கலங்காதே! நீ மலையரசன் பட்டினத்தில் பூங்காவனத்துப் புற்றில் பாம்பு வடிவில் இருக்கும்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்' என வழிகாட்டினார். அங்காளபரமேஸ்வரியாக அகோர உருவம் கொண்ட அன்னை பார்வதி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள்.

புற்றுக்கு நாகமாக அன்னை: அன்னை புற்று வடிவமெடுத்து, மேல்மலையனூர் அரண்மனையில் உள்ள பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக வாழ்ந்து வந்தாள். பூங்காவனத்தில் பெரிய புற்று இருப்பதைக் கண்டு, மலையரசன் அதனை இடிக்க ஆள் அனுப்பினான். அந்த ஆட்கள் அனைவரையும் அன்னை புற்றுக்குள் மறைந்தாள். மீண்டும் ஆள் அனுப்ப, அவர்களும் புற்றுக்குள் மறைந்தனர். இதைக் கண்டு அஞ்சிய மலையரசன், தன் தவறை உணர்ந்து புற்றை வணங்கி, நின்றபோது அன்னை காட்சி கொடுத்தாள்.

சாபம் நீங்க தவம்: அச்சமயம் மலையனூர் வந்த சிவனின் குரல் கேட்ட பார்வதி, விஷ்ணுவை மனதில் நினைத்து தவம் செய்தாள். விஷ்ணுவின் ஆலோசனைப்படி, விநாயகப்பெருமானைக் காவல் நிற்கச் செய்து, அன்னபூரணி மூலம் சுவையான உணவைச் சமைத்து, அதை மூன்று கவளமாக்கினாள். இரண்டு கவளங்களைச் சிவனின் கையில் இருந்த கபாலத்திற்கு ஊட்ட, அதன் சுவையில் மயங்கிய கபாலம் ஆசை தீர உண்டது.

பிரம்மஹத்தி தோஷம்:
மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே கீழே தவற விட, சுவையில் மயங்கிய கபாலம் தரையிறங்கியது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்த அன்னை அங்காள பரமேஸ்வரி, கபாலத்தைத் தன் காலால் நசுக்கித் தரையில் அழுத்தினாள். உடனே சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார். இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அனைத்து ஊர் மயானங்களிலும் மயானக்கொள்ளை உற்சவம் நடத்தப்படுகிறது.

அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்: ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பிரம்மனின் தலையை தன் காலால் மதித்து சிவனை பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுவிக்கின்றாள். இதனால் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி உக்கரம் அடைகிறாள். எனவே அம்மனை சாந்தி படுத்தவே அமாவாசை நள்ளிரவில் அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துகின்றனர். அன்றைக்கு அம்மனைக் காண வரும் பக்கதர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது.

அன்னபூரணி: காசி அன்னபூரணி அங்காளியம்மனின் அம்சமே. மேல்மலையனூரில் உற்சவ தேவியும் அன்னபூரணியே. அங்கத்தில் கோர ரூபமாக இருப்பதால் அங்காள பரமேஸ்வரி எனப்பட்டாள் அன்னை. சிவனின் கரத்திலிருந்த கபாலத்தை அடித்து நொறுக்கி ஆவேச நடனமிட்ட இடம் மேல்மலையனூர் எனப்படுகிறது.

ஐப்பசி அமாவாசை: ஐப்பசி மாத அமாவாசை தினமான நேற்று அதிகாலையில் முதலே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர்அங்காளம்மனுக்கும் பால்,சந்தனம்,விபூதி, பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் மற்றும் பழச்சாறு ஆகியவைகளை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்துஉற்சவர் அங்காளம்மன் அன்னபூரணிஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அன்னபூரணி அலங்காரம்: இரவு 10.30 மணி அளவில் அன்னபூரணி அலங்காரத்தில் உள்ள உற்சவர் அங்காளம்மன் எழுந்தருளினார். கோவிலின் வடக்கு வாசல் பகுதிக்கு தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். ஒரு கையில் கரண்டி, ஒரு கையில் கிண்ணத்தோடு அங்காளம்மன் அலங்காரமாக காட்சி அளித்தார்.

கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்: அதனை தொடர்ந்து நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா,கர்நாடகா, தெலுங்கான, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

பக்தர்கள் பரவசம்:
பக்தர்கள் அனைவரும் தங்கள் கைகளில் உள்ள தேங்காயில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். கொட்டும் மழையிலும் அசையாமல் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களின் கைகளில் இருந்த விளக்குகள் அணையாமல் பிரகாசமாக எரிந்தன. இதைப்பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர். அங்காளம்மன் அருளினால் ஏற்றி வைத்த தீபங்கள் அனைத்தும் அணையாமல் எரிவதாக பக்தர்கள் சிலிர்ப்புடன் பேசிக்கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+