'பிரம்மஹத்தி பாவம்' தொலைக்கும் தலம். பிரதமர் மோடி இன்று தரிசனம் செய்யும் ராமேஸ்வரம் கோவில் தலவரலாறு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை திறந்து வைத்த பின்னர் அருள்மிகு இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்தார்.
பிரதம நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்த ராமேஸ்வரம் திருக்கோவிலின் தல வரலாறும், கட்டிட அமைப்புகள், புனித தீர்த்தங்கள் குறித்து பார்க்கலாம்.
தலவரலாறு
திருமாலின் கையில் உள்ள சங்கைப் போன்ற வடிவைக் கொண்ட இராமேசுவரம் எனும் தீவில், அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் எழிலோடு அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடையது.
ஸ்ரீஇராமபிரான், இராவணனை வதம் செய்ததால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க, அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்திருத்தலத்திற்கு சீதை, இலட்சுமணனுடன் வந்து, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.
சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து, கைலாசத்திலிருந்து சிவலிங்கம் கொண்டு வரும்படியாக இராமபிரான் அனுமனை அனுப்பியதாகவும், நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து அனுமன் சிவலிங்கம் கொண்டு வருவதற்குக் காலம் தாழ்ந்ததால், சீதை விளையாட்டாக மண்ணைக் கையில் பிடித்துச் செய்த சிவலிங்கத்தையே நல்ல நேரம் முடிவதற்குள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

கைலாசத்திலிருந்து திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை அகற்ற முயன்றும் இயலவில்லை. அனுமனை சாந்தப்படுத்த இராமலிங்கத்தின் பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விசுவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, இனி அதற்கே பூசை முதலியன முதலில் செய்ய வேண்டுமென்று இராமபிரான் ஆணையிட்டார்.
இத்திருக்கோயிலில் அனுமனால் கொண்டுவரப்பட்ட விசுவநாதருக்கே தினந்தோறும் முதல் பூசை நடைபெறுகிறது. இராமபிரான் ஈஸ்வரனை வழிபட்டதால் இத்திருத்தலம் இராமேசுவரம் எனப் பெயர் பெற்றது.
எப்போது நடை திறக்கப்படும்?
இத்திருக்கோயில் பொதுவாக அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்படும், காலை 5.00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். மூலஸ்தான தரிசனம் காலை 6.10 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு பகல் 1.00 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும். மதியம் 3.00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 3.15 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

புண்ணிய தீர்த்தங்களில் எப்போது நீராடலாம்?
இத்திருக்கோயிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட
காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும் மதியம் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கோவில் கட்டமைப்புகளின் சிறப்புகள்
முதல் பிரகாரம்
இத்திருக்கோயிலானது இராமயண கால வரலாற்றோடு தொடர்புடையதாகும் ஆரம்ப காலத்தில் இத்திருக்கோயிலானது ஒரு கூரை கொட்டகையில் ஒரு துறவியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. 12ம் நூற்றாண்டில் இலங்கை மன்னன் பராகிரம பாகு என்பவரால் கூரை கொட்டகைக்கு பதிலாக ஓட்டு கட்டிடம் அமைக்கப்பட்டது. தற்போது உள்ள மண்டபங்கள் பல செல்வந்தர்களால் படிப் படியாக கட்டப்பட்டதாகும். இதில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் பங்கு முக்கியமானதாகும்.

இரண்டாம் பிரகாரம்
இராமநாதசுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தினைத் திருமலை சேதுபதி (கி.பி. 1645 - 1675) கட்டி முடித்தார் என்று கருதுகின்றனர். அண்மைக்காலத்தில் இத்திருச்சுற்று முழுவதுமாகத் திருத்திக் கட்டும் பணி நடைபெற்றுள்ளது. பதினாறு அடி அகலம் கொண்ட இத்திருச்சுற்று கிழக்கு மேற்காக 115.80 மீ. நீளமும் வடக்கு தெற்காக 94.20 மீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் உயரம் 5.48 மீட்டராகும். இத்திருச்சுற்றில் தென்கிழக்குத் திசையில் மடப்பள்ளியும் வடகிழக்குத் திசையில் கோயில் கருவூலமும் அமைந்துள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் அம்மன் கோயில் வாயிலைக் கடந்து தெற்கு நோக்கிச் சென்றால் அங்கு திருச்சுற்றுச் சுவரையொட்டி பத்துக் கரங்களுடன் வல்லபதேவியை அணைத்த நிலையில் விநாயகரின் உருவம் உள்ள சிற்றாலயம் காணப்படுகிறது. இதனருகிலுள்ள தூ எண்களில் இரண்டாம் திருச்சுற்றினைக் கட்டிய திருமலைசேதுபதியு அவரது மகனான இரகுநாத சேதுபதி ஆகியோர் உருவமும் காணப்படுகின்றன. இரண்டாம் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் கங்கா, யமுனா, சூரியன், சந்திரன், கயா, பிரம்மஹத்தி விமோச்சன தீர்த்தங்கள் உள்ளன. இப்பகுதியில் பைரவரின் சிற்றாலயம் உள்ளது.
மூன்றாம் பிரகாரம்
இத்திருக்கோயிலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் நடைபெற்ற ஆண்டுகள் 1740 முதல் 1770 வரை

மூன்றாம் பிரகாரத்தின் அமைப்பு
வெளிப்புறம்கிழக்கு - மேற்கு - 690 அடி
வடக்கு - தெற்கு - 435 அடி
உட்புறம்கிழக்கு - மேற்கு - 649 அடி
வடக்கு - தெற்கு - 395 அடி
மொத்த தூண்கள் எண்ணிக்கை 1212
உயரம் 22 அடி 71/2 அங்குலம்
நான்கு புறமும் கடலால் சூழப்பட்டு தீவுப்பகுதியாக உள்ள இராமேசுவரத்தில் கோயில் அமைப்பதற்கான கற்கள் கிடைக்காத நிலையில் போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்திலேயே வெகுதூரத்திலிருந்து கற்கள் கொண்டு வந்து இவ்வளவு நீளமான மற்றும் அழகான பிரகாரத்தை அமைத்துள்ளது மிகவும் ஆச்சர்யம் தரக்கூடிய செயலாகவும், அவர்களின் இறைப்பணியையும் அறிந்து கொள்ள முடிகிறது.
கிழக்கு ராஜ கோபுரம்
கி.பி. 1897-க்கும் 1904-க்கும் இடையே நாட்டுக்கோட்டை நகரத்தார் குடும்பத்தைச் சேர்ந்த தேவகோட்டை ஜமீன்தார் ஏஎல். ஏஆர் குடும்பத்தினரால் திருப்பணி நிதி வசூல் செய்து 126 அடி உயர 9 நிலை கிழக்குக் ராஜ கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

மேற்கு கோபுரம்
கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி அவர்களும், நாகூரைச் சேர்ந்த வைசியர் ஒருவரும் 78 அடி உயரமுள்ள மேற்கு கோபுரத்தை கட்டினர்.
வடக்கு கோபுரம்
கட்டியவர்; ராஜவசந்தகுமார்; 2016 ஆம் ஆண்டு புதியதாக கட்டப்பட்ட கோபுரம். உயரம் 91 அடி.
தெற்கு கோபுரம்
கட்டியவர், ஸ்ருங்கேரி சுவாமிகள்; 2016 ஆம் ஆண்டு புதியதாக கட்டப்பட்ட கோபுரம். உயரம் 91 அடி.
கோவிலில் உள்ள சுவாமிகளின் சன்னதிகள்
அருள்மிகு இராமநாதசுவாமி சன்னதி
அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி
அருள்மிகு விசுவநாதர் சன்னதி
அருள்மிகு விசாலாட்சி அம்மன் சன்னதி
அருள்மிகு மகா கணபதி சன்னதி
அருள்மிகு சுப்பிரமணியர் சன்னதி
அருள்மிகு சேதுமாதவர் சன்னதி
அருள்மிகு நடராஜர் சன்னதி
அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி

கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்கள்
அகஸ்தியர் தீர்த்தம்
அமுத தீர்த்தம்
அங்கத தீர்த்தம்
அர்ஜுன தீர்த்தம்
பீம தீர்த்தம்
பிரம்மஹத்தி பாப விமோசன தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்
சந்திர தீர்த்தம்
தேவ தீர்த்தம்
தர்மர் தீர்த்தம்
திரௌபதி தீர்த்தம்
கந்தமாதன தீர்த்தம்
கங்கா தீர்த்தம்
கவயதீர்த்தம்
கயா தீர்த்தம்
காயத்திரி தீர்த்தம்
அனுமன் தீர்த்தம்
ஹர தீர்த்தம்
ஜட தீர்த்தம்
ஜாம்பவான் தீர்த்தம்
கவாட்ச தீர்த்தம்
கோடி தீர்த்தம்
(தகவல்கள் அனைத்தும்.. https://rameswaramramanathar.hrce.tn.gov.in/)












Click it and Unblock the Notifications