சூரனை வதம் செய்து தேவர்களை காத்த முருகனுக்கு இன்று திருக்கல்யாணம்
சென்னை: முருகன் திருக்கோயில்களில் இன்று முருகன் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது.நேற்றைய தினம் சூரசம்ஹாரம் நடந்த நிலையில் இன்று திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா முடிவு பெறுகிறது.
முருகனுக்கு விசேஷமான கந்த சஷ்டி விழா கடந்த நவம்பர் 2ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

இந்த விழா 7 நாட்கள் நடைபெறும். இந்த 7 நாட்களில் முக்கிய நிகழ்வுகள் என்றால் அது சூரசம்ஹாரமும் திருக்கல்யாணமும்தான். மாதந்தோறும் வரும் சஷ்டி திதியில் முருகனை நினைத்து விரதமிருந்தாலே நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.
அதிலும் இந்த கந்த சஷ்டி விழாவின் 7 நாட்களும் கடுமையான விரதம் இருந்தால் இன்னும் விசேஷம் என்கிறார்கள். பால், பழம் ஆகியவற்றை மட்டுமே ஆகாரமாக இந்த 7 நாட்களும் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக சூரசம்ஹாரத்திற்கு அடுத்த நாள் திருக்கல்யாணம் நடைபெறும்.
இந்த இரு நிகழ்வுகளையும் காண பக்தர்கள் திருச்செந்தூருக்கு குவிவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 ஆம் தேதி முதலே தங்களுக்கு தோதுவான முருகன் கோயில்களில் குவியத் தொடங்கினர். திருச்செந்தூரில் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க டென்ட் அமைக்கப்பட்டது.
அது போல் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. நேற்றைய தினம் மாலை 4 மணி முதல் முருகன் கோயில்களில் சூரபத்மனை முருகன் வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. அசுர வம்சத்தை சேர்ந்த இந்த சூரன், தேவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான்.
அவனை அழிக்க முருகனுக்கு பார்வதி தேவி ஒரு வேலை கொடுத்து அனுப்பி அவரும் சூரனை அந்த வேலால் வதம் செய்தார். அந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.இதற்காக முருகன் கோயிலின் 4 வீதிகளிலும் முருகனுடன் சூரனும் வலம் வரும் நிகழ்வு நடந்தது.
யானை முகம், சிங்கமுகம், அடுத்து மனித முகம் எடுத்த சூரன் முருகன் முன்பு தோன்ற அவனை முருகன் தம் செய்தார். இந்த நிகழ்வை அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். அழகிய முருகன் சூரனை வதம் செய்யும் போது ஆக்ரோஷமாக வருவதை பக்தர்கள் கண்டு மெய்சிலிர்த்தனர்.
கந்த சஷ்டியின் 7ஆவது நாளான இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அனைத்து முருகன் கோயில்களிலும் முருகன் தெய்வானை திருக்கல்யாண நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வுடன் கந்த சஷ்டி விரதமும் முடிவடைகிறது. இன்று அசைவ உணவை உட்கொள்ள கூடாது.












Click it and Unblock the Notifications