ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி.. நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள்.. கண் குளிர தரிசனம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. ரங்கநாதனின் பாதத்தில் மோட்சமடைந்த நம்மாழ்வாரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து தரிசம் செய்தனர். இத்துடன் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைந்தது.
108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் வைணவ பக்தர்களால் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில். இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் ராப்பத்து உற்சவம் தொடங்கி, நேற்று நிறைவடைந்தது.

திருமங்கையாழ்வாா் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த வைகுண்ட ஏகாதசி விழா நாலாயிரத் திவ்ய பிரபந்தத்துக்கும், ஆழ்வாா்களுக்கும் சிறப்பான உற்சவம் ஆகும். திருமாளுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன் தனது பெருமாளின் தொண்டு தொடரவேண்டி வழிப்பறி கொள்ளையன் ஆனாா். இவரைத் தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள், அவரிடம் சிறிதுநேரம் விளையாட்டு காட்டிய பின் அவரது காதில் 'ஓம் நமோ நாராயணாய' எனும் மந்திரத்தை உபதேசித்து ஆட்கொள்வதே வேடுபறி நிகழ்ச்சியாகும்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் போது இராப்பத்து 8ஆம் நாள் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். சனிக்கிழமை நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து தங்கக் குதிரைவாகனத்தில் புறப்பட்டு 5.30 மணிக்கு மணல் வெளிக்கு வந்து சோ்ந்தாா். அதனைத் தொடா்ந்து வையாளி உற்சவம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நம்பெருமாளின் வையாளியை கண்டு தரிசனம் செய்தனா்.
ராப்பத்து உற்சவத்தின் 10 நாளான ஜனவரி 1ஆம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசலை கடந்து சந்திர புஷ்கரணியில் எழுந்தருளினார். அதன் பின்னர் அங்கு தீர்த்தவாரி கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீரை தெளித்துக் கொண்டு பரவசமடைந்தனர். மூலவா் முத்தங்கி சேவை ஜனவரி 1ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றது. சொர்க்கவாசலுக்கு செல்லும் வழியில் நம்மாழ்வார் வெள்ளை ஆடை உடுத்தி, பன்னிரு நாமமும், துளசி மாலையும் அணிந்து காட்சியளித்தார். பின்னர் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டுசென்று, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாளின் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக சமர்ப்பித்தனர்.
பின்னர் நம்மாழ்வாரை துளசியால் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். தொடர்ந்து நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். இதையடுத்து, நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர், நம்பெருமாள் முன் நம்மாழ்வாரைக் காண்பித்து, நம்மாழ்வார் மோட்சம் அடைந்ததாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. இரவு 9 மணி முதல் இன்று ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதல் 5 மணிவரை சாற்றுமறை நடைபெற்றது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications