
சக்தியை வழிபட ஒன்பது இரவுகள்..நாடு முழுவதும் நவராத்திரி உற்சாக கொண்டாட்டம்
சென்னை:
இந்தியா என்பது பல்வேறு மொழிகள் பேசும், வெவ்வேறு கலாச்சாரங்களையும், திருவிழாக்களையும் தொன்று தொட்டு மாறாமல் பின்பற்றி வரும் நாடாகும். தங்களுக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் அடித்துக்கொண்டாலும், நாடு, கலாச்சாரம் என்று வந்துவிட்டால் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடி வருகிறோம். இதனால் தான் நம் நாட்டை பல்வேறு மொழிகளின் காட்சி சாலை என்றும் மொழிகளின் அருங்காட்சியகம் என்றும் மொழியியல் துறை அறிஞரும், தமிழ்நாடு தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அகத்தியலிங்கம் கூறியுள்ளார். நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக தொடங்கியுள்ள நிலையில் எந்தெந்த மாநிலங்களில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது 28 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன. இவற்றில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதோடு, அந்தந்த மாநில மக்களின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து ஒரே சமயத்தில் காலங்காலமாகக் கொண்டாடும் திருவிழா என்றால், அது விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி மற்றும் தசாரா திருவிழா, தீபாவளித் திருநாள், இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய விழாக்கள் மட்டுமே.
குலசை தசரா திருவிழா..சினிமா,டிவி நடிகர்கள் பங்கேற்கலாம்..ஆபாச நடனங்களுக்கு ஹைகோர்ட் தடை

பத்து நாட்கள் திருவிழா
நம் நாட்டில் பொதுவாக மற்ற திருவிழாக்கள் ஓரிரு நாட்களோடு கொண்டாடி முடிக்கப்பட்டுவிடும். ஆனால், தொடர்ச்சியாக பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா என்றால் அது நவராத்திரி மற்றும் தசாரா திருவிழா மட்டுமே. நவராத்திரி, தசரா திருவிழா என்பது நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்பட்டு வந்தாலும், அந்தந்த இடத்திற்கு ஏற்பவும், அந்த இடத்தின் மக்களின் கலாச்சாரப் பாரம்பரியம் மாறாமலும், ராம் லீலா, துர்கா பூஜா, பதுகம்மா பண்டுகா, கர்பா ராஸ், கொலு என பல்வேறு பெயர்களில் நடைபெற்று வருகின்றன என்பது இதன் சிறப்பம்சமாகும்.

முப்பெரும் தேவியர்
தமிழகத்தில் நவராத்திரித் திருவிழா, கலைமகள், அலைமகள், மலைமகள் என முப்பெருந்தேவியர்களைக் கொண்டாடும் விழாவாகும். முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீமகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியையும் கொண்டாடும் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. நவராத்திரி நாட்களைக் குறிப்பிடும் வகையில் 9 படிகளை வைத்து, அதில் ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு நாளைக் குறிக்கும் வகையில், கொலு பொம்மைகளை வைத்து வழிபடுகின்றனர். இதில் தங்கள் முன்னோர்கள் வழி வழியாக வணங்கி வந்த குலதெய்வம், மற்றும் சின்னஞ்சிறிய அளவிலான பொம்மைகளை படிக்கட்டுகளில் வைத்து அலங்கரித்து பூஜை செய்கின்றனர்.

மைசூரு தசாரா
நவராத்திரித் திருவிழா என்றாலே நமக்கு முதலில் நினைவில் வருவது மைசூரு தசாரா திருவிழா தான். கர்நாடகா மாநிலத்தில் இத்திருவிழாவை "நாடஹப்பா" என்று கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவானது, சுமார் 1610ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசு ஆட்சியின் போது தான் முதன் முதலில் கொண்டாடப்பட்டது மைசூரூ அரண்மனை வீதிகளில் நடைபெறும் இத்திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். இந்நகர வீதிகளில் நன்கு அலங்கரிக்கப்பட்ட யானைகளை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்சிகளைக் காண இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பார்வையாளர்கள் வருவதுண்டு.

பதுக்கம்மா பண்டிகை
நவராத்திரித் திருவிழா நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் "பதுகம்மா பண்டுகா" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். பதுகம்மா எனப்படும் பருவகாலத்தில் பூக்கும் மலர்களைக் கொண்டு, பெண்கள் ஒரு மலர் அடுக்கை உருவாக்கி, அதை நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கு பூஜிக்கின்றனர். பின்னர் அதை நவராத்திரியின் கடைசி நாளன்று பதுகம்மா மலர் அடுக்கை அருகிலுள்ள நீர் நிலையில் கொண்டு போய் மிதக்க விடுகின்றனர்.

துர்கா பூஜை
வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்கண்ட், அஸ்ஸாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் நவராத்திரி என்றாலே நினைவுக்கு வருவது, அங்கு நடைபெறும் பிரமாண்டமான துர்கா பூஜை விழா தான். அங்கு மகிஷாசுரன் என்னும் எருமை தலையுடைய அரக்கனை துர்கா தேவி போரில் கொன்று வெற்றி பெற்றதைக் குறிக்கும் விழாவாக நவராத்திரித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது, ஒவ்வொரு நகரம், ஊர், கிராமம் என எங்கு பார்த்தாலும் மார்க்யூஸ் எனப்படும் மிகப்பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு அதில் மிகப்பெரிய துர்கா தேவியின் சிலை நிறுவப்படும். பக்தர்கள் தங்களின் பாரம்பரிய உடையணிந்து பூஜைகள், பிரார்த்தனைகள் செய்து, கையில் சிறிய விளக்குடன் துணுச்சி நாச் என்னும் நடனமாடுகின்றனர்.

ராம் லீலா
உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் நவராத்திரித் திருவிழா ராம்லீலா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீராம பிரானின் கதையானது அங்குள்ள திரையரங்குகள், கோயில்கள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடைகளில் நடைபெறும். நவராத்திரியின் இறுதி நாளன்று இலங்கேஸ்வரன் இராவணன் மற்றும் அவனது மகன் மேகநாதன், இராவணனது தம்பி கும்பகர்ணன் ஆகியோரின் உருவப் பொம்மைகள் கொளுத்தப்பட்டு எரிக்கப்படுகின்றன.

பாரம்பரிய நடனம்
குஜராத் மாநிலத்தில் நவராத்திரித் திருவிழா "கர்பா ராஸ்" என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கர்பா என்பதற்கு கர்பப்பை அல்லது கருப்பை என்று பொருளாகும். அதைக் குறிக்கும் வகையில் ஒரு பானையில் விளக்கை வைத்திருப்பார்கள். இது கருப்பையில் வளரும் உயிரைக் குறிப்பதாகும். அச்சமயத்தில் கர்பா என்ற பெயரில் துர்கா தேவியின் சிலையை வைத்து அதைச் சுற்றி ஆண்களும் பெண்களும் பாரம்பரிய முறையில் நடனமாடுகின்றனர்.

அயோத்தி திரும்பிய ராமன்
இமாச்சலப் பிரதேசத்தில் நவராத்திரித் திருவிழாவானது, ஸ்ரீராமபிரான் மீண்டும் அயோத்திக்கு திரும்பியதை குறிக்கும் வகையில் பத்தாம் நாள் திருவிழா குல்லு தசரா என்ற பெயரில் கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய நாளில், குலு பள்ளத்தாக்கு முழுவதும் பிரகாசமான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். தெய்வங்களின் சிலைகளை அங்குள்ள பிரதான மைதானத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் மிகப்பெரிய ஊர்வலம் நடைபெறுவது இதன் முக்கிய நிகழ்ச்சியாகும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக அங்குள்ள பியாஸ் ஆற்றின் கரையில், லங்காதகன் என்னும் இலங்கையை எரிக்கும் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவடையும்.

தாண்டியா நடனம்
மகாராஷ்டிராவில் நவராத்திரித் திருவிழாவனது "சௌமாங்கல்யம்" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அப்போது, திருமணமான பெண்கள், தங்கள் பெண் தோழிகளை அழைத்து தங்கள் நெற்றியில் திலகமிட்டு, தேங்காய் மற்றும் வெற்றிலையை பரிசாக வழங்குவதுண்டு. இத்திருவிழாவின் போது, அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு தண்டியா இரவுக் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

சக்தி வழிபாடு
பஞ்சாப் மாநில மக்கள் நவராத்திரித் திருவிழாவை "கஞ்சிகா" என்ற பெயரிட்டு கொண்டாடுகின்றனர். இதற்காக அந்தப் பகுதி மக்கள் நவராத்திரித் திருவிழாவின் முதல் ஏழு நாட்களுக்கு விரதம் இருந்து எட்டு மற்றும் ஒன்பதாம் நாட்களில் ஒன்பது சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை வணங்கி தங்கள் விரதத்தை நிறைவு செய்கின்றனர். அன்றைய நாட்களில் பஞ்சாப் மக்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சக்தியை வழிபடும் ஜாக்ரதாக்கள் என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றனர்.