அயோத்தி சாலைகளில் தமிழ்.. 'ராம் கி பாடி'.. 28 மொழிகளில் பெயர் பலகை.. ஆனாலும் புரியலையே?
அயோத்தி: ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ஆம் நடைபெற உள்ள நிலையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவதிலும் இருந்து வரும் சிறப்பு விருந்தினர்களுக்காகவும், வெளிநாட்டு விருந்தினர்களுக்காகவும் தமிழ், வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட 28 மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலுக்கு செல்லுவதற்கு அயோத்தியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் பலகை அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அயோத்தி கும்பாபிஷேகம்: எல்லா சாலைகளும் ரோம் நகரத்தை நோக்கி என்பது போல.. அயோத்தியை நோக்கிதான் எல்லோருடைய பார்வையும் திரும்பியுள்ளது. ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது பாஜகவின் மிக முக்கியமான தேர்தல் அறிக்கை. அதை நிறைவேற்றும் வகையில் கடந்த சில ஆண்டு காலமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யவும் நாள் குறிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட ஏற்பாடுகள்: ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் அயோத்தியில் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்காக பல்வேறு வகை பிரசாதமும் அன்னதானமும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பிலும் சிறப்பு பிரசாதம் தயாராகி வருகிறது. இதன் சார்பில் பசுவின் நெய்யில் தயாரிக்கப்படும் லட்டுகள் ஐந்து வகையாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இப்பணிக்கு உதவிட நாடு முழுவதிலும் இருந்து விஎச்பி தொண்டர்கள் அயோத்தி வரவுள்ளனர்.
குவியும் பக்தர்கள்: அயோத்தி வந்து குவியும் பக்தர்களுக்கு ஜனவரி 15 முதல் மார்ச் வரை ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதில் 56 வகை உணவுகள் பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் தொண்டு செய்வதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து விஎச்பி தொண்டர்களும் நிர்வாகிகளும் அயோத்திக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
அன்னதானம்: பக்தர்களுக்கு அன்னதானம் ராமர் கோயில் அறக்கட்டளை அலுவலகம் அமைந்த ராம்கோட் பகுதியில் நடைபெற உள்ளது.இதுபோல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அயோத்தி வந்து பிரசாதங்கள் தயாரித்து விநியோகிக்க ராமர் கோயில் அறக்கட்டளையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து சில தனிப்பட்ட ராம பக்தர்கள் வந்து அயோத்தியில் தங்கி அன்னதானம் செய்ய உள்ளனர்.
28 மொழிகளில் அறிவிப்பு பலகை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தமிழ் உள்ளிட்ட 28 மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அயோத்திக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, அங்குள்ள பல்வேறு இடங்களை குறிக்கும் வகையில், தமிழ் உள்ளிட்ட 28 மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன மொழிகள்: வெளிநாட்டு மொழிகளில் அரபு, சீனம், பிரஞ்சு, ஆங்கிலம், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகியவை அடங்கும். மேலும் இந்திய மொழிகள் இந்தி, உருது, அஸ்ஸாமி, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, குஜராத்தி, டோக்ரி, தமிழ், தெலுங்கு, நேபாளீஸ், பஞ்சாபி, பங்களா, போடோ, மணிப்பூரி, மராத்தி, மலையாளம், மைதிலி, சந்தாலி, சமஸ்கிருதம் மற்றும் சிந்தி மொழிகளில் அறிவிப்பு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
எங்கெங்கு அறிவிப்பு பலகை: இதுவரை, ஹனுமான் கர்ஹி, கனக் பவன், ராம் கி பைடி, அயோத்தி தாம் சந்திப்பு, தேதி பஜார் மற்றும் அயோத்தி விமான நிலையம் ஆகிய இடங்களில் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் அறிவிப்பு பலகைகளை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.
ராம் கி பைடி: ஸ்ரீ ராம் கி பைடியின் வரலாறு ராமர் காலத்திலிருந்தே தொடங்குகிறது . அயோத்தியின் மன்னன் தசரதன், சரயு நதியில் ராமர் நீராடுவதைக் கண்டதாக புராணம் கூறுகிறது. பின்னர் அவர் தரிசனம் கண்ட அதே இடத்தில் ஒரு காட் கட்டுமாறு தனது கட்டிடக் கலைஞர்களுக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து அனைவரும் புனித நீராடுவதற்கு அங்கு படித்துறை கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு செல்லும் வழி என்பதை குறிக்கும் வகையில் தமிழில் ராம் கி பாடி என்று எழுதப்பட்டுள்ளது. பல மொழிகளில் எழுதப்பட்டிருந்தாலும் அதன் அர்த்தம் மற்ற மொழி மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை என கூறி அதனை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையிலும் இந்தியின் நேரடி மொழி பெயர்ப்பு போலவே உள்ளதால் புரிந்து கொள்வது கடினமாக இருப்பதாக பக்தர்கள் கூறி வருகின்றனர்.
பால ராமர் சிலை: கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை சடங்குகள் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும் மற்றும் நகரம் முழுவதும் யாத்திரையாக கொண்டு செல்லப்படும். யாத்திரையின் போது, சிலை ஒரு கவரில் மறைத்து வைக்கப்படும். பொதுமக்கள் பார்வைக்கு வெளியே தெரியாது ஜனவரி 22 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி கருவறையில் பால ராமர் சிலையை நிறுவ உள்ளார்.
சூரிய கதிர்களால் அபிஷேகம்: இதுகுறித்து கோயில் அறக்கட்டளை பொதுச் செயலர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சைத்ர சுக்ல நவமி அதாவது ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் அவரது நெற்றியில் சூரியனின் கதிர் படும் வகையில் கர்ப்பகிரகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சூரிய குலத்தில் பிறந்த ராமனுக்கு சூரிய கதிர்களால் அபிஷேகம் நடைபெறும் என்பது சிறப்பான செயல்தானே.












Click it and Unblock the Notifications