ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு பஸ்கள்.. பம்பையில் இருந்தே ஏறலாம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல காலம் நாளை தொடங்குவதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து, சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு மண்டல மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது..

மண்டல காலம்: இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல காலம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டலப் பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழ்நாட்டிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பக்தர்கள் வசதிக்காக தமிழக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
சபரிமலை: அந்தவகையில் இந்த ஆண்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில், "சபரிமலைக்கு இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதனைக் கருத்தில் கொண்டு சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கியமான நகரங்களிலிருந்து கூடுதலாகப் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம்: இன்று 15ம் தேதி முதல் 2025 ஜனவரி 16ம் தேதி வரை சென்னையில் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்தும், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்தும் பம்பைக்கு, அதிநவீனச் சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.
மேலும் குழுவாகச் செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு Online மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.27, 30ஆம் தேதி மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பம்பையில் இருந்தே பஸ் ஏறலாம்: கடந்த வருடம் வரை தமிழக அரசு விரைவு பஸ்களுக்கு பம்பையிலிருந்து பக்தர்களை ஏற்ற அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த வருடம் முதல் தமிழக அரசு விரைவு பஸ்களுக்கு பம்பையில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் பம்பையில் இருந்தே இந்த பஸ்களில் ஏறிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications