சோபகிருது..தமிழ் புத்தாண்டில் கனி காணுங்கள்...குல தெய்வத்தை கும்பிட்டால் கூடவே வரும்!
மதுரை: தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளில் கனி காணுவதும் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதும் சிறப்பானது. புத்தாண்டின் முதல்நாளில் பூஜை அறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து கனிகளை வைத்து காண்பதன் மூலம் வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு சோபகிருது தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறக்கிறது. தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாள் புது வருடப்பிறப்பு விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில் தான்.

ஆலய தரிசனம்: தமிழ் புத்தாண்டு நாளில் ஏராளமானோர் அதிகாலையிலேயே கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது வழக்கம். புது வருடப்பிறப்பன்று குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுவது அதிக நன்மைகளைத் தரும். குல தெய்வ வழிபாட்டின் மூலம் நம் குடும்பம் வாழையடி வாழையாய் தழைக்கும். நம் இஷ்ட தெய்வ வழிபாடு இருந்தாலும் முதலில் குல தெய்வத்தை வணங்கினால் தான் சகல சௌபாக்யங்களும் நம்மை தேடி வரும். வாழ்க்கை செழிப்புடன் அமையும்.
அறுசுவை உணவுகள்: தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை சமைத்து படையலிட வேண்டும். இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்கும் உணவுகளை சமைப்பது சிறப்பு. பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை. ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற படையலை படைப்பது விசேஷம். அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு அறுசுவை உணவினை புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது. வேப்பம்பூ வெல்லம் சேர்த்த பச்சடி செய்வார்கள். சிலரது வீடுகளில் வேப்பம்பூ ரசம் செய்து சாப்பிடுவார்கள்.

பஞ்சாங்கம்: புதுவருட நாளில் நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தூய ஆடைகளை அணிந்து அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் தடவி, பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர், விநாயகர் நவக்கிரகங்கள், குல தெய்வம் ஆகியவைகளுக்குப்பூஜை செய்து வழிபட வேண்டும். சித்திரை முதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் பலவித பலன்கள் கிடைக்கும். விரதத்தைப்பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப்பற்றிச் சொன்னால், செல்வச்செழிப்பும் கரணத்தைப் பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும். அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும். யோகத்தைப்பற்றிச் சொன்னால், நோய்கள் குணமடையும்.
கனி காணுதல்: சித்திரை வருடப்பிறப்பன்று பலரது வீட்டிலும் கனி காணுதல் நடைபெறுவது வழக்கம். புத்தாண்டிற்கு முதல்நாளே பூஜை அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மங்கள பொருட்களை காணச்செய்வதே கனி காணுதல் ஆகும். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக பார்க்க வேண்டும். நம் வீட்டு குழந்தைகளையும் பார்க்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் சுப காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை.

கை நீட்டம்: சித்திரை மாதம் முதல் நாள் கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்த சித்திரை பிறப்பு வரை கூட சிலர் வைத்திருப்பர்.
தானம் செய்யுங்கள்: புது வருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். குடை தானம், செருப்பு தானம், விசிறி தானம் ஆகியவற்றை செய்யலாம். நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்றவைகளை செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கும்.












Click it and Unblock the Notifications