திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லையே ஏன்? முருகனுக்கு கோபம் வராதா? அமைதியோ அமைதியான தலம்
திருவள்ளூர்: கந்த சஷ்டி விரதமும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் அறுபடை வீடுகளில் மிக கோலாகலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கமாகும்.. ஆனால், முருகனின் 5ம் படை வீடான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லை.. ஏன் தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் நேற்றைய தினம் சொக்கநாதர் கோயில் அருகே சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது... மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் நடந்தது.

முதலில், கஜமுகத்துடன் சூரபத்மன் தோன்றினான். அவன் ஆணவத்துடன் தலையை ஆட்டியபடி, ஜெயந்திநாதரை சுற்றி வந்தவுடன், வதம் செய்து தலையை கொய்தார். மறுபடியும் சிங்கமுகத்துடன் வந்த சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்தார். பிறகு சூரபத்மன் நேரிடையாக தோன்றினான். அவனையும் வதம் செய்தார். இறுதியில், சூரபத்மனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் முருகப்பெருமான் ஆட்கொண்டார்.
பழனி மலை: திருச்செந்தூர் தவிர, முருகனின் மூன்றாவது வீடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையாகும். வீரபாகு, நவ வீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படைசூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும், சக்திவேல் கொண்டு முருகன் இந்த பழனியில்தான் வதம் செய்தார். எனவே, இங்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அலைகடலென திரண்ட மக்கள் முன்பு நடைபெற்றது.
அதேபோல, முருகனின் நான்காவது வீடு, தஞ்சையிலுள்ள சுவாமிமலை ஆகும்.. சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கி சூரசம்ஹாரம் செய்து, சுவாமி தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்து வீதிஉலா வைபவம் சுவாமி மலையிலும் சிறப்புற நடைபெற்றது.
பழமுதிர்ச்சோலை: ஆறாவது வீடு என்பது மதுரை மாவட்டத்திலுள்ள பழமுதிர்சோலை ஆகும். வெள்ளிமயில் வாகனத்தில் புறப்பட்ட முருகன், கோயிலின் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும், பிறகு நாவல் மரத்தடியில் நின்று பத்மாசூரனையும் சம்ஹாரம் செய்தார்.
ஆனால், முருகனின் ஐந்தாவது வீடு என போற்றப்படுவது திருவள்ளூரில் உள்ள திருத்தணி ஆகும்.. இங்கும் மட்டும் சூரசம்ஹாரம் விழா நடைபெறாது.. திருத்தலம் முழுவதும் அமைதியாகவே காணப்படும்.
இதற்கு காரணம், சினம் கொண்ட முருகனின் கோபம் தணிந்து, வள்ளியை திருமணம் புரிந்து அமைதியாக அமர்ந்திருக்கும் தலம் இதுவாகும்.. அதனால்தான் இதற்கு திரு தணிகை என்று பெயர் வந்தது.. இதுதான் மருவி திருத்தணி என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இந்தக் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது.
தணிகை மலை: திருத்தணிகை மலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ, அல்லது தணிகை மலை இருக்கும் திசை நோக்கி வணங்கினாலோ, தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ, தீராத நோய்நொடிகளும் தீரும் என்கிறது தணிகை புராணம்.. தேவர்களது அச்சம் தணிந்த தலம் இதுவாகும்.. அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் இதுவாகும்.. அதனால்தான், தணிகை எனப்படும் திருத்தணி கோயில் என்றும் அமைதியாகவே காணப்படுமாம்.
எனவே, திருத்தணியில் சூரசம்ஹாரத்திற்கு பதிலாக உற்சவராக இருக்கும் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது... அதுமட்டுமல்ல, திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகனுக்கு திருத்தணியில் சினம் தணிக்க மலர்களால் அர்ச்சனையும் செய்யப்படுகிறது.
எனவே, திருத்தணிகை அறுபடை வீடுகளில் ஒன்றாக புகழ் பெற்றாலும், முருகனின் சினம் தணிந்து மனம் குளிர்வித்த தலமாக உள்ளதுடன், தேவர்களின் அச்சம் தீர்த்த தலம், பக்தர்களின் கவலைகளை தணிக்கும் தலமாகவும் உள்ளதால், சூரசம்ஹாரத்தன்று முருகனுக்கு மலரஞ்சலி செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications