லிங்கத்தை வீட்டில் வைக்கலாமா? சிவலிங்கம் வழிபாட்டில் கிடைக்கும் பலன்! சிவலிங்க பூஜையின் ஸ்பெஷாலிட்டி
சென்னை: சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.. சிவலிங்கத்தை வீட்டில் வைத்திருப்பது சிலர் அபசகுனம் என்பார்கள்.. ஆனால், உரிய விதிமுறைகளை பின்பற்றினால், லிங்கத்தை வீட்டிலேயே வைத்து வழிபடலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்தவகையில், வீட்டில் சிவலிங்கத்தை எப்படி வைத்து வணங்க வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.
வீட்டின் வடகிழக்கு மூலையில் சிவலிங்கம் வைக்க சிறந்த இடமாகும். எப்போதுமே வீட்டில் வைத்து வழிபடும் சிவலிங்கம் சிறியதாக இருக்க வேண்டும். அதாவது நம்முடைய கட்டை விரலை விட அதிகமாக இருக்க கூடாது.. அதிலும் ஒரு லிங்கம்தான் இருக்க வேண்டும். ஒன்றிற்கும் மேற்பட்ட சிவலிங்கங்களை வைத்து வழிபடக்கூடாது.

சிவ சின்னங்கள்
அப்படி சிவலிங்கம் வைத்து வழிபடும் இடத்தில் மற்ற சிவ வடிவங்களை வைக்கக்கூடாது. அனைத்து உயிர்களும் சிவனுள் அடக்கம் என்பதால், ஒரே இடத்தில் சிவ சின்னங்கள் வைத்திருக்க கூடாது. அதேபோல, கல்லால் ஆன லிங்கமாக இருந்தால் நல்லது.. உலோகம் என்றால், தங்கம், வெள்ளி, செம்பினால் ஆன சிவலிங்கமாக மட்டுமே இருக்க வேண்டும்.
சிவலிங்கத்தை ஏதாவது ஒன்றினுள் போட்டு மூடி வைக்கக்கூடாது.. மங்களகரமானது என்பதால் காற்றும், வெளிச்சமும் இருக்க வேண்டும்.. சிவலிங்கத்தின் மீது எப்போதும் நீர் விழும்படியான அமைப்பில் வைத்திருக்க வேண்டும்.
நேர்மறை ஆற்றல்
நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சிவலிங்க வழிபாடுகள், மன ஆரோக்கியத்திற்கு மேம்படுத்தக் கூடியவை.. எனவே, சிவலிங்கத்தை வழிபடுவதாக இருந்தால், கட்டாயம் உரிய முறையில் பூஜை செய்ய வேண்டும். அப்படி காலை, மாலையும் பூஜை செய்ய முடியாது என்ற சூழல் இருந்தால், வீட்டில் சிவலிங்கத்தை வைத்திருக்கக் கூடாது.
வீட்டில் சிவலிங்கத்தை தண்ணீர் ஊற்றிருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். லிங்கத்தின் மீது தண்ணீர் படவில்லை என்றால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடுமாம்..எனவே, தினமும் காலையில் குளித்த பிறகு சிவலிங்கத்திற்கு சிறிதளது தண்ணீராவது ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அதற்கு பிறகு சந்தனம் வைக்க வேண்டும். மற்றபடி மஞ்சள், குங்குமம் என எதையும் லிங்கத்திற்கு வைக்கக் கூடாது.
அர்ச்சனை வழிமுறைகள்
பால், தண்ணீர், கங்கை தீர்த்தம் போன்றவைகளை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டுமே, தேங்காய் தண்ணீரால் அபிஷேகம் செய்யக் கூடாது. எப்போதும் சிவனுக்கு மிகவும் பிடித்த வெள்ளை பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அதேபோல, லிங்கத்தை மட்டும் தனியாக வைத்து பூஜை செய்யக் கூடாது. அத்துடன், கௌரி அல்லது விநாயகரின் களிமண் சிலையை வைத்து பூஜை செய்வது சிறப்பை தரும் என்கிறார்கள். சிவலிங்கத்திற்கு பூஜை செய்த எந்த ஒரு பொருளையும் பிரசாதமாக உண்ணக் கூடாது. இதுபோல வழிமுறைகளை கடைப்பிடித்து பூஜை செய்து வந்தால், வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலகும்.. மன அழுத்தம் நீங்கி மன அமைதியும் கிடைக்கும்.
வெளியூர் பயணம்
ஓரிரு நாட்கள் வெளியூர் செல்வதானால், ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டுச் செல்லலாம். நீண்ட நாட்கள் ஊருக்கு செல்ல நேர்ந்தால், தினசரி அபிஷேகம், நைவேத்தியம் செய்வதற்கு கட்டாயம் யாராவது ஒருவரை நியமிக்க வேண்டும்..
அல்லது கையோடு சிவலிங்கத்தை வெளியூருக்கு கொண்டு சென்றுவிடலாம். நீங்கள் எங்கே தங்கி இருக்க போகிறீர்களோ, அங்கேயே வைத்து உரிய பூஜைகளை செய்யலாம்.. இதெல்லாம் சாத்தியம் என்றால் மட்டுமே, வீட்டில் லிங்கத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications