ஸ்லாப்பில் அரிசி மாவில் இதை எழுதுங்க.. மகிழ்ச்சி, பணம், ஆரோக்கியம், வெற்றிக்கு தை வெள்ளி ஸ்பெஷல்ஸ்
சென்னை: தை மாத வெள்ளிக்கிழமைகள் என்றாலே, தனிச்சிறப்புகளும், மகத்துவமும் நிறைந்தவை.. தை வெள்ளிக்கிழமைகளில் ஒருசில காரியங்களை செய்தாலே, வாழ்க்கையிலுள்ள இன்னல்கள் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும் என்பார்கள்.. அந்தவகையில், சில குறிப்புகளை பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்குரிய தினமாகும்.. எனவே, அன்றைய தினத்தில் சிறப்பு பூஜைகளை செய்வது, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும், தை மாத வெள்ளிக்கிழமைகள் கூடுதல் சிறப்பு வாய்ந்தவை.

வெள்ளிக்கிழமை: எத்தனை வெள்ளிக்கிழமை வந்தாலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கும் தை மாத வெள்ளிக்கிழமைகளுக்கும் தனிப்பெருமை உண்டு.. அந்தவகையில், தை மாத வெள்ளிக்கிழமைகளில், ராகு கால வேளையில் அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால், குடும்பத்தில் இன்னல்கள் தீர்ந்து விடும் என்பார்கள்.
அதிகாலையில் பெண்கள் எழுந்து, நீராடி, வீட்டின் பூஜை அறையிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் மலர்கள் அணிவித்துவிட வேண்டும். மகாலட்சுமியின் படத்தின் முன்பு வெற்றிலையின் மீது பச்சரிசியை பரப்பி, அதன் மீது அகல் விளக்கை வைத்து நெய் தீபம் ஏற்ற வேண்டும். இதே போன்று, சிறிய வாழையிலை மீது கல் உப்பை பரப்பிவைத்து, அதன் மீது அகல் வைத்து நெய் தீபம் ஏற்றலாம். அல்லது குத்துவிளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய்யால் 5 முகங்களை ஏற்றி, மனதார பிரார்த்தித்து வரலாம்.
நிரந்தர வாசம்: வெள்ளிக்கிழமைகளில் வீடெல்லாம் மணம் கமழும்படியாக பார்த்து கொள்ள வேண்டும்.. மகாலட்சுமி வீட்டில் நிரந்தரமாகவே சந்தோஷத்துடன் வாசம் செய்ய, சாம்பிராணி தூபம் போட்டு வைக்க வேண்டும்.. அதேபோல, வீடு சுத்தமாக இருக்க வேண்டும்..
வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமியும், மற்ற நல்ல தேவதைகளையும், சமையல் அறையை பார்ப்பதற்காக வருவார்களாம். எனவேதான், வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில், சமையலறை மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும். எச்சில் பாத்திரங்களை போட்டு வைக்கக்கூடாது.. சமையல் அறை மேடையையும், அடுப்பையும் கழுவி துடைத்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.
பச்சரிசி: சிறிது பச்சரிசியை ஊற வைத்து அரைத்து மாவாக்கி, அதில் சமையல் மேடையில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து, "ஓம் அக்ஷயம்" என்ற வார்த்தையை எழுதி, ஏதாவது வாசனை பூவை அதன்மீது வைக்கலாம். சிறிய பாத்திரத்தில், சாதம் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்புக்கு பக்கத்தில் வைத்திருக்கலாம். இதனால், வீட்டில் அன்னலட்சுமி என்றுமே தங்கியிருக்கக்கூடும்.அதேபோல, பூஜை செய்யும் போது, கிச்சனிலும், தீப தூப கற்பூர ஆராதனையும் காட்ட வேண்டும்..
வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் அரிசி மாவினால் வாசலில் கோலமிட வேண்டும். பெண்கள் கையில் வளையல், நெற்றியில் பொட்டு வைத்திருக்க வேண்டும்.. வளையல் அணியாமல், விளக்கேற்றவோ, சாப்பாடு பறிமாறவோ கூடாது.
வெள்ளி விளக்கு: லட்சுமி கடைக்கண் பார்வை வேண்டுமானால், தைமாத வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரம் படித்து அதிகாலை நேரம் வழிபடுவது நல்லது.. அதேபோல, சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்ற வீட்டில் அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும்.
அதேபோல, அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். துர்க்கை சன்னிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபம் ஏற்றி வழிபடுவதால், குடும்பத்தின் மீதான திருஷ்டிகள் நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல், தை வெள்ளிக்கிழமைகளில், சர்க்கரைப் பொங்கல், போல ஒவ்வொரு வாரமும் ஏதாவது பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி வருவதால், தானியமும், தனமும் குடும்பத்தில் பெருகும்.












Click it and Unblock the Notifications