தை மாத சங்கடஹர சதுர்த்தி.. அருகம்புல் வைத்து விநாயகரை வணங்கினால் சங்கடங்கள் நீங்கும்
சென்னை: அருகம்புல் அற்புதமானது. எளிமையான இந்த புல் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல ஆன்மீக ரீதியாகவும் அற்புதமான ஒரு பொருளாக உள்ளது. தை மாத சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று விநாயகருக்கு பிடித்தமான இந்த அருகம்புல் வைத்து வழிபட்டால் நம்முடைய சங்கடங்கள் நீங்கும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
முழு முதற்கடவுள் விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் வளர்பிறை சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் தேய் பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். இன்றைய தினம் தை மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் என்பதால் விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று அருகம் புல் வைத்து வழிபடுவது சிறப்பானது.
இன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று விநாயகர் கோவிலுக்கு சென்று ஆலயத்தை 11 முறை வலம் வர வேண்டும். அருகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும். விநாயகர் கோயிலில் நடக்கும் சங்கடஹர பூஜையின் போது, விநாயகரின் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலை வழங்க வேண்டும்.
கோவிலில் விநாயகருக்கு நடக்கும் அபிஷேகங்களையும், பூஜையையும் கண்குளிர கண்டு வணங்கி வீடு திரும்பியதும் பூஜையறையில் பூஜிக்கப்பட்ட சிலை அல்லது படத்தை வணங்கி, பூஜையில் வைக்கப்பட்ட நைவேத்தியங்கள் பிரசாதமாக எடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முடிக்க வேண்டும்.
விநாயகருக்குப் பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது சிறப்பான பலன்களைத் தரும். அதிலும் வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் கணபதி ஆனந்தமயமானவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும். இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். கடன் பிரச்சினைகள் நீங்கவும் செல்வ வளம் பெருகவும், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், கேதுவால் ஏற்படும் தோஷங்களும் நீங்கவும் சங்கடஹர சதுர்த்தியில் . விநாயகர் தரிசனம், விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது, விநாயகருக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுப்பதன் மூலம் சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications