சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய அதிசயம்.. திருக்கழுங்குன்றத்தில் பரவசம்
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய சங்கு பிறந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மகாசிவராத்திரியை ஒட்டி தற்போது சங்கு பிறந்துள்ளதால் ஏராளமான பக்தர்கள் சங்கு தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கழுகுன்றத்தில் பழமையான சிவன் கோவில்களில் ஒன்றான வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது, இது தொண்டைநாட்டில் உள்ள 28வது தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம். தெய்வம் முதல் தீர்த்தம் வரை, இந்த கோயிலின் ஒவ்வொரு அம்சமும் ஆர்வமுள்ள பார்வையாளர்களையும் பக்தர்களையும் வியக்க வைக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

பல நூற்றாண்டுகளாக ஒரு ஜோடி கழுகுகள் இந்த இடத்திற்கு வருகை தந்ததால் இந்த நகரம் பக்ஷி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
இரண்டு கழுகுகள் தங்கள் பாவங்களைப் போக்குவதற்காக வேதகிரீஸ்வரரை வழிபடுவதற்காக மலைக்கு வந்த வரலாற்றின் காரணமாக இந்த பெயர் சூட்டப்பட்டது. திருக்கழுகுன்றத்தில் தினசரியும் பிற்பகல் நேரத்தில் இரண்டு கழுகுகள் கோயிலின் மேல் தோன்றி இறைவனை வழிபடுகின்றன. பின்னர் அவர்கள் ஒரு பாறையில் இறங்குகிறார்கள், அங்கு கழுகுகளுக்கு உணவு படைக்கப்படுகிறது. இந்த கழுகுகள் உணவை எடுப்பதை பார்ப்பது ஒரு அரிய அனுபவம். மேலும் இந்த அதிசயத்தை காண நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள்.
இந்த புனித கழுகுகள் பிரம்மாவின் மகன்கள் என்று நம்பப்படுகிறது, அவர்கள் செய்த பாவங்களுக்காக சிவபெருமான் பூமியில் கழுகுகளாக பிறக்க சபித்தார். சாப விமோசனம் அடைந்து தங்கள் அசல் வடிவங்களை மீண்டும் பெறவும், அவர்கள் கலியுகத்தின் இறுதி வரை இந்த கோவிலின் சிவபெருமானை வணங்க வேண்டும். இந்த புனித கழுகுகள் திரேதா யுகத்தில் சண்டன் மற்றும் பிரசண்டன் என்றும், க்ருத யுகத்தில் சம்பாதி மற்றும் ஜடாயு என்றும், தவபர யுகத்தில் சம்புக்தன் மற்றும் முகுந்தன் என்றும், கலியுகத்தில் அவை இப்போது பூஷா மற்றும் விதாதா என்றும் அழைக்கப்படுகின்றன.
திருக்கழுகுன்றம் நகரில் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இதில், தாழக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் சந்நிதி தெருவின் கடைசி பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் சங்கு தீர்த்த குளம் அமைந்துள்ளது. இதன் புராண வரலாறு சுவரசியமானது.
மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்ததாகவும் அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இக்குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும். இதையடுத்து, குளத்தில் சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் இந்த சங்கை சுவாமியே வழிபாட்டுக்கு வழங்கியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதன்மூலம், இக்குளத்துக்கு சங்குதீர்த்த குளம் என பெயர் பெற்றுள்ளது.
மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறக்கும் வைபவம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு பிறக்கும் சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகளுடன் சங்கு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரம் நாளில் மலைமீது வேதகிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த சங்குமுதன்மை பெறும்.
சங்கு தீர்த்தத குளத்தில் மார்க்கண்டேயர் காலத்தில் சங்கு பிறந்த பிறகு 1939ஆம் ஜூன் மாதம் 6ஆம் தேதி சங்கு தோன்றியது. 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியும், 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியும் சங்கு பிறந்துள்ளது. 1988ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதியும், 1999ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதியும் சங்கு பிறந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கு பிறந்த நிலையில் 12 ஆண்களுக்குப்பிறகு தற்போது சங்கு தீர்த்த குளத்தில் சங்கு பிறந்துள்ளது.
உப்புநீரில் சங்கு உற்பத்தியாகும் என்ற நிலையில், குளத்து நன்னீரில் சங்கு பிறப்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இதனால், வேதகிரீஸ்வரரை தரிசிக்க வரும் வடமாநில பக்தர்கள் உட்பட அனைவரும் இக்குளத்தில் நீராடி மலையைகிரிவலம் வந்து சுவாமியை வழிபடுகின்றனர். மேலும், ஏற்கெனவே குளத்தில் பிறந்த சங்குகளை பக்தர்கள் தரிசிப்பதற்காக கோயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் சங்கு பிறந்ததை முன்னிட்டு நேற்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் சங்கை தரிசித்து வந்தனர். இதனையடுத்து மாலை சிவாச்சாரியார்கள், குருக்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேள, தாளங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக பக்தவச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு சென்று சங்கு வைக்கப்பட்டது.
புதிதாக பிறந்த இந்த சங்கை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மற்றும் காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி, செங்கல்பட்டு எஸ்.பி. சாய் பிரணீத், முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜி.டி.யுவராஜ் ஆகியோர் வணங்கிச் சென்றனர். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் பிரியா, மேலாளர் விஜயன் ஆகியோர் பக்தர்கள் சங்கு தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மகா சிவராத்திரி நாளை முன்னிட்டு சங்கு பிறந்துள்ளதால் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications