நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை..என்னென்ன சிறப்புகள்..வாழ்நாளில் ஒருமுறை தரிசியுங்கள்
திருவண்ணாமலை
அண்ணாமலை என்பதன் பொருள் அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது. கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் திருவண்ணாமலையின் சிறப்புகளைப் பற்றி முகநூல் பக்கத்தில் சிவன் அடியார்கள் பலரும் சிறப்பாக எழுதியுள்ளனர். அதில் சிலவற்றை உங்களுக்கு தொகுத்து அளித்துள்ளோம்.
கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளெல்லாம் வழிபட்டுள்ளனர்.
சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம். ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் நிறைந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் பால ரமணர் தவம் செய்த இடம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

தங்கமலை
மிகப்பழமையான திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி. உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில்மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும்.
வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது.
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும்.

14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதை
மலையின் உயரம் 2,688 அடி. கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

செந்தூர விநாயகர்
கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.

நந்திக்கு பெருமை
மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.
அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.
தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

தீபதரிசன மண்டபம்
அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

திருப்புகழ் அருணகிரியார்
திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது. இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

மீனின் பெயர் செல்லாக்காசு
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

கரும்புத்தொட்டில்
அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம். தேரோட்டம் நாளில் ஏராளமான பக்தர்கள் கரும்புத்தொட்டில் கட்டி வந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இத்தனை சிறப்புகளை கொண்ட திருவண்ணாமலையை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசனம் செய்ய மறக்காதீர்கள்.












Click it and Unblock the Notifications