திவ்ய தரிசன டோக்கன்..திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களே..இதை படிச்சிட்டு போங்க!
திருப்பதி: திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரிமெட்லா பாதையில் உள்ள கலிகோபுரத்தில் தரிசன டோக்கனை ஸ்கேன் செய்யா விட்டால் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பணக்கார கடவுளாக கலியுக வரதனாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறார் திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான். திருப்பதிக்கு சென்று வந்தாலே திருப்பம் நிச்சயம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர். லட்சக்கணக்கில் பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ. 120.29 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 2022 மார்ச் மாதம் முதல் இந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தொடர்ந்து மாதம் உண்டியல் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வருகிறது. 2022-23 நிதி ஆண்டில் ரூ.1,520.29 கோடி உண்டியல் மூலமாக காணிக்கை கிடைத்துள்ளது. இது 2023-24 நிதி ஆண்டில் ரூ.1,700 கோடியாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு நேர்த்தி கடனாக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மார்க்கங்கள் வாயிலாக தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நடந்தே மலையேறி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். 9 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த படி பாதையில் 3550 படிகள் உள்ளன.
சில ஆண்டுகளாக இவ்விரு பாதைகளில் செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. மேலும், இரண்டு லட்டு பிரசாதங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா தொற்றின் போது திவ்ய தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது.
ஏப்ரல் 1 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அலிபிரி வழியாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் 10 ஆயிரம் டோக்கன் களும், ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் 5 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்பட்டன. அலிபிரி பாதையில் காலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும், ஸ்ரீவாரி மெட்டு பாதையில் காலை 6 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையிலும் திவ்ய தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரி படிகள் வழியாக மட்டுமே திருமலைக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரிமெட்லா பாதையில் உள்ள கலிகோபுரத்தில் படி எண் 2083ல் தரிசன டோக்கனை ஸ்கேன் செய்யா விட்டால் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு வழியில் திருமலை சென்றாலும் திவ்ய தரிசன டிக்கெட் பயன்படாது. மெட்டு வழித்தடத்தில் வழக்கம் போல் டோக்கன்கள் வழங்கப்படும். வாகனம் மூலம் திருமலையை அடைய விரும்புவோருக்கு ஸ்ரீனிவாசம், ஆர்.டி.சி. பஸ் நிலையம் எதிரிலும், விஷ்ணு நிவாசம், ரயில் நிலையம் பின்புறம், கோவிந்தராஜ சத்திரங்கள் ஆகிய பகுதிகளில் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சாதாரண பக்தர்களுக்கு சாமி கும்பிட முன்னுரிமை அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோடை விடுமுறை காலத்தில் புரோட்டகால் தகுதி வாய்ந்த பக்தர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படும்.எனவே முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனத்திற்காக பரிந்துரை கடிதங்களை பக்தர்களிடம் கொடுத்து அனுப்பக்கூடாது என்று கேட்டு கொண்டிருக்கிறோம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர, தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் எண்ணிக்கை மற்றும் பல்வேறு மாநில சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கு வழங்கப்படும். 300 ரூபாய் தரிசன டிக்கெட் எண்ணிக்கை ஆகியவற்றையும் கோடைகாலத்தில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications