Lunar Eclipse: செப்.7ஆம் தேதி சந்திர கிரகணம்! திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்!
திருப்பதி: வரும் செப்டம்பர் 7ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி கோயில் அன்றைய தினம் மதியம் 3.30 மணி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கிரகணம் என்பது இயற்கையாக நிகழும் வானியல் நிகழ்வுதான் என்றாலும் இது மனிதர்களின் வாழ்வில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். சூரியன் அல்லது சந்திரனின் நிழல் பூமியின் மீது படும் போது அந்த பகுதி மறைக்கப்படுவதையே கிரகணம் என்கிறோம். அந்த வகையில் ஒரு ஆண்டிற்கு 4 அல்லது 5 கிரகணங்கள் ஏற்படும்.

இந்த ஆண்டில் 2 சூரிய கிரகணங்களும் இரு சந்திர கிரகணங்களும் மட்டுமே வருவகிறது. இந்த நான்கு கிரகணங்களில் ஒன்றை மட்டுமே இந்தியாவில் காண முடியும். இந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம்தேதி இரவு 9.56 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 1.26 மணி வரை நிகழ்கிறது. இந்த கிரகணத்தை மட்டுமே இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் காண முடியும்.
இந்தியாவில் கிரகணம் தென்படும் என்பதால் அன்றைய தினம் பல்வேறு கோயில்கள் மூடப்படும். அந்த வகையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலும் மூடப்படும். பொதுவாக கிரகணத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே கோயில் மூடப்படும்.
அந்த வகையில் செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கே கோயில் வாசல்கள் மூடப்படும். பிறகு செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் நடைபெறும். பிறகு காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
செப்டம்பர் 7ஆம் தேதி கிரகணத்தையொட்டி ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 8.30 மணி முதல் அன்னபிரசாத விநியோகம் தொடங்கும். இதற்கேற்ப பக்தர்கள் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications