திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா.. காணும் இடமெங்கும் மக்கள் கூட்டம்.. என்னென்ன ஏற்பாடுகள்?
சென்னை: சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு வந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக காரைக்காலில் இருந்து திருநள்ளாறு ஆலயத்திற்கு 24 மணி நேரமும் இலவச பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தர்பாரண்யேஸ்வரர் ஆலயம். இங்கு நவகிரக ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இன்றைய தினம் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்

இந்த சனிப்பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சனி பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தூய்மையான குடிநீர், போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெருக்கடியை தவிர்க்க சிறப்பு கட்டண வசதி, காவல்துறை மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து இடங்களும் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை மூலம் விரிவான மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே தற்காலிக தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. QR code மூலமாக பக்தர்களுக்கு தேவையான வழித்தடங்களை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசன கட்டணத்தில் உள்ள QR code மூலமாக அவர்கள் கோயிலுக்கு செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
சனி பெயர்ச்சி விழாவினை பல்வேறு தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் காவல்துறை மூலம் ரோந்து பணிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் புதுச்சேரியிலிருந்து 1,500 போலீசாரும், காரைக்கால் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் என ஏறக்குறைய 2 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
விழா ஏற்பாடுகள் குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க கோரி காவல்துறைக்கும், அரசுத்துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கினார்.
சனிப்பெயர்ச்சி நாளான இன்று திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் நடை அடைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாறு செல்ல போக்குவரத்துத்துறை சார்பில் இலவச பேருந்துகள் இன்று 20ஆம் தேதி காலை 6 மணி முதல் நாளை 21ஆம் தேதி காலை 6 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications