அயோத்தி ராமர் கோவிலுக்கு போகும் திருப்பதி லட்டுகள்.. பக்தர்களுக்கு சுவையான பரிசு தரும் தேவஸ்தானம்
திருப்பதி: அயோத்தி ராமர் கோவிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பரிசு அனுப்பப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டுக்கள் ஒரு லட்சம் எண்ணிக்கையில் அனுப்பப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஏவி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
ராம ஜென்ம பூமியை நோக்கி அனைவரும் செல்லத் தொடங்கி விட்டனர். எத்தனையோ போராட்டங்கள், வழக்குகளுக்கு பிறகு ராமர் பிறந்த இடமான அயோத்தியில் பிரம்மாண்டமான ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 22ஆம் தேதியன்று ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும் புனித தீர்த்தங்கள் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் அரசியல் பிரமுகர்களுக்கும் பாஜகவினர் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்று விட்டு அயோத்தி திரும்பிய போது மக்கள் வீடுகள் தோறும் விளக்கேற்றி கொண்டாடினர். அதே போல தீபாவளி நாளில் சரயு நதிக்கரையில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படுகிறது. அதே போல ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது
மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் ஸ்ரீராமர், அதே போல திருப்பதி சீனிவாச பெருமாளும் மகாவிஷ்ணுவின் அவதாரம்தான். ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி கோவிலில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அரசனை போல கையில் வில்லேந்தி பிரம்மாண்டமாக காட்சி தருகிறார் ஸ்ரீராமர்.
இதே போல திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1 லட்சம் லட்டு பிரசாதங்கள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தர்மா ரெட்டி கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் வி.வி.ஐ.பி.க்களுக்கு இந்த லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தர்மா ரெட்டி கூறியுள்ளார். ஒவ்வொரு லட்டும் தலா 25 கிராம் இருக்கும் என்றும், இந்த லட்டுகள் கும்பாபிஷேகச் சடங்குகளின் போது பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஒன்று திருப்பதி பாலாஜி, மற்றொன்று திருப்பதி லட்டு பிரசாதம். வேறெங்கும் இல்லாத அளவிற்கு அவ்வளவு தரமானதாகவும், சுவையானதாகவும் வேறெங்கும் கிடைப்பதில்லை. திருமலை திருப்பதி திருக்கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டுவிற்கு தனித்துவம் உண்டு.
திருப்பதி லட்டு போல் வேறு எந்த இடத்திலும் தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை தனித்துவமாக இருக்கும். அதற்காகவே இந்த லட்டுக்கு மவுசு அதிகம். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த லட்டு என்பதால், திருப்பதி லட்டுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் அதுபோல தயாரித்து விற்பனை செய்ய முடியாது. அதுமட்டுமல்லாமல் உற்பத்தி மற்றும் அளவு, நறுமண மனத்துடன் வேறு எங்கும் தயாரிக்கப்படுவதில்லை.
திருமலையில் தினசரி 2 லட்சம் முதல் 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டுகள் பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில் 5 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழுமலையான் தரிசனம் முடிந்த உடனே பக்தர்கள் நேராக செல்வது லட்டு வாங்குவதற்குத்தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பதி லட்டு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications