திருப்பதி லட்டு பிரசாதம்.. தரம் சுவையில் மாற்றமா?.. தேவஸ்தானம் சொல்வதென்ன?
திருப்பதி: திருமலைக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை தவறாமல் வாங்கிச் செல்வார்கள். உலக பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்து விட்டதாகவும், சுவையும் லட்டின் அளவும் முன்பைப் போல் இல்லையெனவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் எந்நாளுமே திருப்பதி திருமலை மலையப்ப சாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மூன்று வேலையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் பால், மோர் போன்றவையும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பக்தர்களின் வருகை அதிகரிக்கும் நேரத்தில் கூட்டத்திற்கு ஏற்ப அன்னதானத்தின் அளவும் அதிகரிக்கப்படும். உற்சவ நாட்களில் பக்தர்கள் இருக்கும் இடத்திலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.
திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத நன்கொடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தினமும் திருமலையில் சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் இலவசமாக உணவு உண்டு வருகின்றனர்.
மேலும் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள், பஸ் நிலையம், மாதவம், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதிகள், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் என பல்வேறு இடங்களில் இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறைவாக உள்ளதாக கூறி பக்தர்கள் பாதியிலேயே எழுந்து சென்றனர்.
தரமும் இல்லை, சுவையும் இல்லை என பக்தர்கள் சாப்பாட்டுடன் இலையை மூடி விட்டு சென்றனர். திருமலையில் நித்யான்ன பிரசாதத்தின் தரம் குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தனர். மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமங்கா அன்னதான பிரசாத் கேந்திராவில் அரிசி பிரசாதம் தரம் சரியில்லை என்று திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரிசி வேகவில்லை என்றும் அப்படியே இருப்பதாகவும் தெரிவித்தனர். கோடி கணக்கில் காணிக்கை செலுத்தியும் நல்ல சாப்பாடு போட முடியாதா என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பக்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய தேவஸ்தான ஊழியர்கள், பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்று கூறி தவறுக்கு மன்னிப்பு கோரினர்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர ரெட்டி இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, அன்னபிரசாதம் சரியில்லை என பக்தர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அரிசியின் தரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தின் தரமும் சுவையும் சரியில்லை என்று பக்தர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு பதில் அளித்த தேவஸ்தான நிர்வாகி தர்மா ரெட்டி, லட்டு பிரசாதத்தின் தரமும் சுவையும் குறைய வாய்ப்பு இல்லை என்றனர். காலம் காலமாக லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பார்முலா படிதான் பொருட்கள் சேர்க்கப்பட்டு லட்டு தயாரிக்கப்படுவதாக கூறினார். மனித தவறுகள் ஏதேனும் நடைபெற்று இருக்குமா என்று ஆய்வு செய்வதாகவும் கூறினார் தர்மா ரெட்டி.
இதையடுத்து, திருமலையில் உள்ள வைபவ உற்சவ மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நீண்ட காலமாக, பரம்பரை பரம்பரையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மடப்பள்ளியில் லட்டு பிரசாதம் தயாரித்துவரும் 'வைஷ்ணவ பிராமணர்கள்’ அனைவரும் பங்கேற்றனர்.
அப்போது, லட்டின் தரம், சுவை,அளவு குறைந்ததாக பக்தர்கள் கூறும் புகார்கள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஆனால், பல நூற்றாண்டுகளாக திருப்பதி லட்டுவின் சுவையும், தரமும் குறைய வாய்ப்பே இல்லை என்றும், அதற்காக முன்னோர்கள் வகுத்த திட்டம் எனும் அளவின்படியே, இன்று வரை திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வைஷ்ணவ பிராமணர்கள் குழுவினர் தெரிவித்தனர்.
திட்டம் என்பது அளவாகும். சுமார் 5 ஆயிரம் லட்டு தயாரிக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் இன்று வரை கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய், நெய், முந்திரி, உலர் திராட்சை, கற்கண்டு, ஏலக்காய், பச்சை கற்பூரம் போன்றவை சேர்க்கப்பட்டு, லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. இதில் எடையும் கூட குறைய வாய்ப்பில்லை என மடப்பள்ளி வைஷ்ணவ பிராமணர்கள் தெரிவித்தனர்.
திருப்பதியில் ஏழுமலையானுக்கு எத்தனையோ பிரசாதங்கள் படையலிட்டாலும் அங்கு லட்டுதான் பக்தர்களுக்கும் பிரசாதமாக தரப்படுகிறது. கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்பவர்களுக்கு மிகப்பெரிய லட்டு, வடை பிரசாதமாக தரப்படும். 300 ஆண்டுகளுக்குப் மேற்பட்ட பாரம்பரியம் கொண்டது லட்டு பிரசாதம். அதன் சுவையைப் போல வேறு யாராலும் தர முடியாது. திருப்பதி லட்டு புவிசார் குறியீடு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications