புத்தாண்டில் திருப்பதி செல்லும் பக்தர்களே.. டிக்கெட் இருந்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதி
திருமலை: திருப்பதியில் சொர்க்க வாசல் இலவச தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் டிக்கெட் இல்லாதவர்கள் ஜனவரி 1ஆம் தேதி வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வர வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏழை பணக்காரர்கள் என அனைவருக்குமே ஏழுமலையான் அருள்பாலிக்கிறார். இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா போல வைகுண்ட ஏகாதசி விழாவும் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருமலை திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 23ஆம் தேதியன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதன் காரணமாகக் கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 10 டன் அளவுள்ள மலர்கள் மற்றும் பழங்கள் ஆகியவை கொண்டு கோயிலில் வெளிப்புறம், உள்புறம், பலிபீடம், கொடிமரம் மற்றும் வைகுண்ட வாசல் போன்ற இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது ஏழுமலையான் ஆலயம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக சென்று தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக டிக்கெட் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருப்பதியில் பக்தர்கள் ஜனவரி 1ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். இலவச தரிசனத்திற்காக ஒரு நாளைக்கு 43 ஆயிரம் டோக்கன்கள் என 10 நாட்களுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச சர்வ தரிசன டோக்கன்கள் கடந்த 22ஆம் தேதி மதியம் 2 மணி முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் இந்த டோக்கன்களை பெற ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.
இந்நிலையில் திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்ட வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜனவரி 1ஆம் தேதி வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய முடியாது எனவும் இலவச தரிசன டோக்கன்கள் ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக திருமலைக்கு வர வேண்டும். தரிசன டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இருப்பினும் திருமலைக்கு அனுமதிக்கப்படும் கோயில் வெளியே கோபுர தரிசனம், மொட்டையடிப்பது, திருமலையில் வராக சுவாமி உள்ளிட்ட இதர சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு விடுமுறை தினத்தில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தனர். டிக்கெட் இருந்தால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications