மகளிர் தினத்தில் உத்தரவிட்ட சிவன்மலை ஆண்டவர்..பெட்டியில் வைக்கப்பட்ட பொருளால் என்ன மாற்றம் வரும்?
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை, திருமாங்கல்ய சரடு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும் பொருளால் சமுதாயத்தில் நல்லதும் கெட்டதுமாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது வைத்து பூஜை செய்யப்படும் பொருளால் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். மலை மீது உள்ள கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும்.
தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் 8ஆம் தேதியான மகளிர் தினத்தில் இருந்து திருமாங்கல்ய சரடு வைத்து பூஜை செய்யப்படுகிறது. அத்துடன் உலக உருண்டை, அத்திரி என்ற பசு சிலை, அசுவம் என்ற குதிரையை குறிக்கும் பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள் என்று பேசப்பட்டது.

கடந்த ஆண்டு அம்பும், செம்பும் வைத்து பூஜை செய்யப்பட்டது. செம்மண், கதிர் அரிவாள், தீர்த்தகலசம் போன்றவை வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முத்தூர், வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான அகிலம் என்ற உலக உருண்டை, அத்திரி என்ற பசு சிலை, குதிரையை குறிக்கும் பொருள், 2 திருமாங்கல்ய சரடு ஆகியவை மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பக்தர்கள் கூறும்போது "ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம். தற்போது வைத்து பூஜிக்கப்படும் அகிலம் என்ற உலக உருண்டை, அத்திரி என்ற பசு, அசுவம் என்ற குதிரையை குறிக்கும் பொருள், 2 திருமாங்கல்ய சரடு ஆகிய 4 பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் உலக அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மகளிர் தினத்தில் மாங்கல்ய சரடு வைத்து பூஜை செய்யப்படுவதால் அதிக அளவில் திருமணங்கள் நிகழும் என்றும் முருகப்பெருமான் உணர்த்துவதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications