ஆழித்தேரோட்டம்.. திருவாரூர் மாவட்டத்திற்கு மார்ச் 21ல் உள்ளூர் விடுமுறை.. 2000 போலீசார் பாதுகாப்பு
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலில், ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. மேலும், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது.
அந்த வகையில், வரும் மார்ச் 21ஆம் தேதி ஆயில்ய நட்சத்திரம் வருவதை ஒட்டி, அன்றைய தினம் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.
தேரின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மரங்கள், துணி, அலங்கார பொருட்கள்,குதிரைகள் என அனைத்தும் பிரம்மாண்டமான வகையில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேரோட்டத்தின் பொழுது தேரை இயக்கவும் கட்டுப்படுத்தவும் புல்டோசர், ஜேசிபி பயன்படுத்தப்படும். மேலும் வடக்கயிறின் எடையே 15 டன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகைக் காண கண் கோடி வேண்டும்.
எந்த ஒரு சிவ தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே. திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. இத்தலம் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதியன்று ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தேரோட்டத்திற்கு வரும் பெண் பக்தர்களிடம் நகை திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார், சாதாரண உடையில் பணியில் ஈடுபடுவார்கள். தேரோட்டத்தின்போது கூட்டத்தை கண்காணிக்க தெற்கு வீதி, வடக்கு வீதி, மேற்கு வீதி, கீழ வீதி ஆகிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. தேரோடும் நான்கு வீதிகளிலும் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு செய்ய போலீசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications