70 வயதா? அப்படியென்றால் தமிழக அரசின் ரூ 2500 பரிசு உங்களுக்குத்தான்! எப்படி விண்ணப்பிக்கலாம்?
சென்னை: தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட 2000 தம்பதிகளுக்கு ரூ 2500 மதிப்பிலான பொருட்களை தமிழக அரசு வழங்குகிறது.
இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்களுக்கு திருக்கோயில்கள் மூலம் ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, மஞ்சள் குங்குமம், மஞ்சள் கயிறு, வாழைப்பழம் உட்பட 11 பொருட்கள் வழங்கி சிறப்பு செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இச்செலவினை இயன்றவரை உபயதாரர் மூலமும், உபயதாரர் கிடைக்கப்பெறாத நிலையில் திருக்கோயில் நிதி மூலமும் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை பொது மக்களுக்கு அறிவிக்கும் வகையில் திருக்கோயில்களில் விளம்பர பதாகைகள் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மேலும், இப்பணிகளை கண்காணித்து சட்டமன்ற அறிவிப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்திட தொடர்புடைய மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அது போல் முக்கியமான கோயில்களில் குழந்தைகளுக்கென பால் வழங்கப்படுகிறது. மேலும் திருவிழாக்காலங்களில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சோர்வடையாமல் இருக்க மோர், தண்ணீர், ஜூஸ் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 43,748 திருக்கோயில்கள் உள்ளன. அவற்றில் சமணக் கோயில்கள் 22, திருமடங்கள் 45, திருமடங்களுடன் இணைந்த திருக்கோயில்கள் 69, அறக்கட்டளைகள் 1263 ஆகும். அது போல் திருக்கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் இந்து அறநிலையத் துறை மீட்டு வருகிறது.
அது போல் ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தையும் இந்து அறநிலையத் துறை கையில் எடுத்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 தலங்களுக்கு 200 பக்தர்கள் வீதம் 5 கட்டங்களாக ஆண்டுக்கு 1000 பக்தர்களை இலவசமாக ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்து செல்கிறார்கள். 60 முதல் 70 வயதுடையோர் இந்த சுற்றுலா செல்ல விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications