திருப்பதியில் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் மசால் வடை பிரசாதம்! தேவஸ்தானம் சர்ப்ரைஸ்
திருப்பதி: திருப்பதியில் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மசால் வடை பிரசாதமாக வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதாவது அன்ன பிரசாதத்துடன் இந்த வடையும் வழங்கப்படும்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவர்கள் வயிறார சாப்பிட கோயிலுக்கு அருகிலேயே தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் முதல்வராக இருந்த போது 1983 ஆம் ஆண்டு ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

திருமலை, திருப்பதியில் நாளொன்று 2.5 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அன்னதானத்தில் சுடச்சுட சாம்பார், ரசம், மோர், பொரியல், காரசாரமான துவையல், சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பிரசாதத்தில் பக்தர்களுக்கு மசால் வடையும் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி வெங்காயம், பூண்டு சேர்க்காமல் மசால் வடைகளை தயாரித்து சோதனை முறையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கினர்.
இதற்கு பக்தர்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து வரும் பிப்ரவரி 4ஆம் தேதி ரத சப்தமி முதல் அனைத்து பக்தர்களுக்கும் வடை பிரசாதமாக வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த அன்னதான கூடத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இரு வேறு தளங்களாக உள்ளன.
அன்னதான கூடத்தில் மட்டுமில்லாமல் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலவை சாதம் வழங்கப்படுகிறது. அது போல் காட்டேஜுகளுக்கு அருகேயும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கான அன்னதான திட்டத்தின் விலை ரூ 44 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் ஒரு நாளைக்கான அன்னதான செலவை ஏற்க விரும்பினால் ரூ 44 லட்சம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஒரு வேளைக்கான உணவின் செலவையும் ஏற்கலாம்.
அதன்படி காலை சிற்றுண்டிக்கு ரூ 10 லட்சம், மதிய உணவிற்கு ரூ 17 லட்சமாகவும் இரவு உணவுக்கு ரூ 17 லட்சமாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடம், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பழைய அன்னபிரசாத கூடம் மற்றும் கோயிலுக்கு வெளியே நிற்கும் பக்தர்கள், மாற்று திறனாளி பக்தர்கள், மூத்த குடிமகன்களுக்கான கூடம், ரூ.300 சிறப்பு தரிசன காம்ப்ளக்ஸ், திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதிகளில் தினமும் அன்னதானம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications