திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி கோலாகலம்.. பட்ஜெட் தாக்கல்..வருமானம் எவ்வளவு தெரியுமா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நடப்பாண்டு உண்டியல் வருமானம் ரூ.1500 கோடியாக அதிகரித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடப்படுகின்றன. திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்ற நம்பிக்கையில் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர். உகாதி பண்டிகை செவ்வாய்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பூக்களால் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானையும் மலையப்பசுவாமியையும் தரிசனம் செய்தனர்.
ஏழுமலையானுக்கு தினசரியும் கோடிக்கணக்கான ரூபாய்கள் உண்டியல் வருமானம் மூலம் கிடைக்கிறது. முடி காணிக்கை மூலமும் பலகோடி வருமானம் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் கோவிலில் வேலை செய்கின்றனர். பக்தர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருமானம் எந்த அளவிற்கு கிடைக்கிறதோ அந்த அளவிற்கு செலவும் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் ஏழுமலையான் கோவிலில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

ஏழுமலையான் கோவில் பட்ஜெட்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளது.

2023-2024 பட்ஜெட்
திருப்பதி தேவஸ்தானம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரவு செலவு திட்டத்தைத் தயாரித்திருந்தது. ஏற்கனவே கடந்த மாதம் இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்த காரணத்தினால் இது குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

பக்தர்கள் எதிர்பார்ப்பு
தெலுங்கு புத்தாண்டு தினமான உகாதியை முன்னிட்டு திருமலை அன்னமா பவனில் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் நேற்று வெளியிடப்பட்டது. இது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். திருப்பதி தேவஸ்தான ஆட்சி மன்ற குழு 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட்டை பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க சுமார் 4,400 கோடி ரூபாயில் தயாரித்துள்ளதாக கூறினார்.

ரூ.1000 கோடி வட்டி
இதன் மூலம் உண்டியல் காணிக்கை மூலம் 1,591 கோடி ரூபாயும், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தின் மூலம் 1,000 கோடி வட்டி பணமும், பிரசாத விற்பனையின் மூலம் 500 கோடி ரூபாய் வருவாயும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாடகை வருமானம்
அதேபோல் கடைகள் அறைகள் மற்றும் விடுதிகளின் மூலம் கிடைக்கும் வாடகையில் ரூபாய் 100 கோடி ரூபாயும் கிடைக்கும். இதனை வைத்து பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 3,200 கோடி மதிப்பீட்டில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் உண்டியல் காணிக்கையின் வருமானம் கடுமையாகக் குறைந்தது. அதற்கு ஏற்றவாறு வருடாந்திர பட்ஜெட் மதிப்பீடுகளும் குறைக்கப்பட்டன.

உண்டியல் வருமானம் உயர்வு
2021- 22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் 2937.82 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 3000 கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் உண்டியல் காணிக்கை வருமானம் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது மற்றும் பட்ஜெட் திட்டங்களும் அதற்கு ஏற்றவாறு அதிகமாக உள்ளன எனத் தெரிவித்தார். நடப்பாண்டு உண்டியல் வருமானம் அதிகரித்துள்ளது. பட்ஜெட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம நவமி
இதனிடையே ஏழுமலையான் கோவிலில் வரும் 30ஆம் தேதி ஸ்ரீ ராம நவமி விழாவும், மார்ச் 31 ம் தேதி ஸ்ரீ ராம பட்டாபிஷேக விழாவும் நடத்தப்பட உள்ளன. இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 30 ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீ சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் உற்சவ மூர்த்திகள், ரங்கநாயகுல மண்டலத்தில் எழுந்தருளச் செய்து ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மாலையில் 06.30 மணி முதல் 8 மணி வரை அனுமந்த வாகனத்தில் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications