வைகாசி மாத பூஜை..சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மே 14ல் திறப்பு..ஆன்லைன் முன்பதிவு அவசியம்
சபரிமலை: ஐயப்பன் கோவில் நடை வரும் 14ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. வைகாசி மாத பூஜைக்காக மே 15ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், வைகாசி மாத பூஜைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 12 மாதங்களும் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கார்த்திகை மாதத்தில் மட்டும் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறந்திருக்கும்.

பங்குனி மாத ஆரட்டு விழாவும், சித்திரை மாத விசு கனி காணும் விழாவும் ஐயப்பன் கோவிலில் சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15ஆம்தேதி முதல் 19ஆம் தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 15ஆம் தேதி முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
சபரிமலையில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், வைகாசி மாத பூஜைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.



Click it and Unblock the Notifications
