வசந்த பஞ்சமி 2025 எப்போது கொண்டாடப்படுகிறது? சரஸ்வதிக்கு பூஜை செய்ய உகந்த நேரம் எது?
சென்னை: வசந்த பஞ்சமி என்றால் என்ன? இந்த விழாவின் போது சரஸ்வதி பூஜை நடத்தப்படும். வசந்த காலம் வருவதை குறிக்கும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.
இந்த விழாவின் போது கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதியான சரஸ்வதி தேவியை நினைத்து வழிபடுகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு வசந்த பஞ்சமி வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி அடுத்த நாள் 3ஆம் தேதி காலை வரை கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 3ஆம் தேதி காலையிலேயே இந்த பஞ்சமி முடிவதால் பிப்ரவரி 2ம் தேதி முழுவதும் வசந்த பஞ்சமியை கொண்டாட ஏற்ற நாளாகும்.
வசந்த பஞ்சமி அல்லது பசந்த்த பஞ்சமி என்பது இந்துக்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும். இந்த பண்டிகை ஸ்ரீ பஞ்சமி அல்லது கியான் பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. வசந்த காலம் வருவதை குறித்தும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த பஞ்சமி அன்று சரஸ்வதிக்கு பூஜை செய்வது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவியை வணங்கினால் அறிவு, ஞானம் ஆகியவை கிடைக்கும். இந்த வழிபாட்டில் சாரதா தேவி, வக்தேவ், வீணா வதினி ஆகியோரையும் வழிபடுவது முக்கியம்.
இந்த வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவியிடம் வேண்டும் வரம் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் வசந்த பஞ்சமி அன்றுதான் சரஸ்வதி தேவி அவதரித்தார். சரஸ்வதிக்கே படிப்பு சொல்லி கொடுத்தது ஹயகிரீவர் என்கிறார்கள். எனவே இந்த நாளில் சரஸ்வதியை நினைத்து வழிபட்டால் ஞானம், கலைத் திறமைகள் மேம்படும்.
அறுவடை திருநாளாகவும் இந்த வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கடுகு செடியிலிருந்து மஞ்சள் நிற பூக்கள் பூக்கும், மாங்காய் மரத்தில் இலைகள் துளிர்க்கும். காலண்டரின்படி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி பஞ்சமி திதி வருகிறது. அன்றைய தினம் 9.14 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் பிப்ரவரி 3ஆம் தேதி காலை 6.52 மணிக்கு முடிவடைகிறது.
எனவே பிப்ரவரி 2ஆம் தேதி முழுக்க சரஸ்வதியை வணங்க உகந்த நாள்.பூஜைகள் செய்ய உகந்த நேரம் எது என்றால் காலை7.09 மணி முதல் மதியம் 12.35 மணி வரையாகும்.
பூஜை செய்ய வேண்டிய முறை: பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று சீக்கிரமாக எழுந்து குளித்து முடித்துவிட வேண்டும். அன்றைய தினம் மஞ்சள் நிறத்தில் உடை அணிய வேண்டும். வீட்டில் உள்ள அனைவருமே மஞ்சள் உடையைத்தான் அணிய வேண்டும். சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து மலர்களை வைக்க வேண்டும்.
பிறகு இனிப்புகள், மஞ்சள் நிறத்தினாலான உணவு, சீசனில் கிடைக்கும் பழங்களை படைத்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும். பிறகு ஆரத்தி எடுத்துவிட்டு அந்த உணவு பொருட்களை பிரசாதமாக கொடுத்தல் வேண்டும். இவ்வாறு வசந்த பஞ்சமியை கொண்டாடி உங்கள் குழந்தைகளுக்கு தேவையான கல்வியையும் கலைஞானத்தையும் பெறுங்கள்.












Click it and Unblock the Notifications